ரகசியத் துகள்
மனித சமூக அமைப்பின் அடிப்படையையே புரட்டிப்போடும் அறிவியல் உண்மையை கண்டுபிடித்த மகத்தான நாளில் மோகன் தன் ஆராய்ச்சிகூடத்தை விட்டு வெளியே வந்த போது இரவு பதினொரு மணியைத் தாண்டி இருந்தது.
மார்கழி
மாத வெளிக்காற்று பட்டு சுயநினைவு வந்த பிறகுதான் தன் கையடக்கத் தொலைபேசியைத் தேடினான்.
அமுதா ஆறு தடவைகள் அழைத்திருந்தாள். கடைசியாக ஏறக்குறைய ஒன்பது மணி அளவில். ஏதும் அவசரம்
என்றால் குறுந்தகவல் அனுப்பி இருப்பாள். நல்ல வேளையாக அப்படி ஒன்றும் இல்லை. குளிரில்
தன்னை கைக்குட்டை போல சுருட்டிக்கொண்டு படுக்கிறவள் இன்னமும் விழித்திருக்க வாய்ப்பு
இல்லை.
மோகன்
தாமதமாக வருவது அமுதாவுக்கு புதியதா என்ன? கல்யாணமாகி இரண்டாவது நாளே விடியற்காலை மூன்று
மணிக்குத்தான் மோகன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். புது மனைவி வெலவெலத்து தனக்கு அரைகுறையாகத்
தெரிந்து இருந்த அயலவர்கள், மோகனின் நண்பர்கள் வரை எல்லோரிடமும் விசாரித்து களேபரம்
செய்து வைத்திருந்தாள். போதாதென்று ஊரிலுள்ள அவளது பொக்கைவாய் பாட்டி வேறு "புருஷன
முந்தானைக்குள்ள போட்டு வைச்சுக்கோடி மா. ஆம்பிள
புத்தி அலைபாயுற புத்தி" போன்ற அறக்கருத்துகளைச் சொல்லி அவளைப் பயத்தின் விளிம்பில்
சிம்மாசனம் போட்டு உட்கார வைத்திருந்தாள்.
அன்று
மோகன் வீட்டுக்கு வந்தவுடன் அவன் உள்ளங்கைகளில் அமுதா முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கி
விட்டாள்.
"நான்
ரொம்ப பயந்துட்டேன். ஒரு வார்த்தை கூடவா சொல்ல தோணேல்ல."
"இனிமே
நீ சாப்பிட்டு தூங்கு. உள்ள போனா எந்த ஞாபகமும் இருக்கிறதில்ல எனக்கு."
"இங்க
பொட்டச்சி தனியா இருக்காளே என்ற ஞாபகமும் வராதோ?" முகத்தை அவன் உள்ளங்கைகளோடு
இறுக்கி அணைத்துக் கொண்டு கேட்டாள்.
"ஏய்
மக்கு. மனிச உணர்ச்சிகள்ல உன்னதமான கணங்கள் கொஞ்சம் தான். ரொம்ப சந்தோஷமா ரொம்ப கவலையா
ரொம்ப தனிமையா. அந்த நேரத்துக்கு தான் இந்த
உறவுகள் எல்லாம். அந்த நேரத்துக்கு உறவுகள தக்க வைச்சுக்க தான் மத்த நேரம் எல்லாம்
மாயுறோம். எனக்காக உன்னை வருத்திக்காத."
"மனித
உணர்ச்சிகள்ல நான் இப்ப ரொம்ம்ம்ப கவலையா இருக்கேன்"
மோகன்
அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். "நாலு புள்ள பெத்து போடுவோம்னு உங்க அப்பன்
பாத்த சாத்திரக்காரன் சொல்லித்தானே என்ன கட்டிக்கிட்ட? செத்துபோயிறாம வந்து சேர்ந்துடுவேன்.
நீ முழிச்சிருக்காத. புரியதா?"
"முழிச்சிருக்காம
நாலு புள்ள எப்பிடியாம்?"
பின்னர்
சில நாட்களில் மோகன் வீட்டுக்கு வருவது கூட இல்லை. கடந்த இரண்டரை வருடங்களில் அமுதா
இந்த வாழ்க்கைமுறைக்கு நன்றாகவே பழகிப்போனாள். இரண்டு தடவைகள் ஆராய்ச்சிகூடத்துக்கு
மோகனோடு வந்திருக்கிறாள். அதன் வடிவமைப்பும் ஒருவிதமான மருந்து வாசமும் அவளுக்கு பெரிதாக
ஒத்துக்கொள்ளவில்லை. இளநீல நிறத்தில் சுவர்களுக்கு வண்ணம் பூச வேண்டும் என்று சொல்லி
இருக்கிறாள்.
மோகன்
தன் உள்ளங்கைகளைப் பார்த்தான். ஈரமாகத்தான் இருந்தது. அவன் உள்ளம் முழுக்க அமுதாவின்
நினைவுகள் பிரவாகம் போல நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. அன்றையைப் போலவே அவளின் முகத்தைத்
தன் உள்ளங்கைகளில் தாங்கி அவள் காதோரமாகதான் முதன்முதலாக தன் ஆராய்ச்சியின் உண்மையை
மிக மிக ரகசியமாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.
"எத்தனை
வருட உழைப்பின் பயன் இந்த கண்டுபிடிப்பு. அந்த சாதனைக்காக என்னைப் போலவே தன்னை முழுமையாக
அர்ப்பணித்தவள் அமுதா அல்லவா? அவளுக்கென்ன தலையெழுத்தா? எந்த நம்பிக்கையில் அவள் என்
ஆராய்ச்சி மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள்?"
அமுதாவிடம்
தன் கண்டுபிடிப்பை எப்படி சொல்வது? அவள் புரிந்து கொள்வாளா? ஏற்றுக் கொள்வாளா? அறிவியலை
நம்ப வைக்க அவனிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. அவளை நம்ப வைக்க அவை எதுவும் செல்லுபடியாகாது.
அவளின் ஆதாரமான உணர்வுகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவள் முழுமையாக உணர்வுகளை நம்புகிறவள்.
ஒரு வேளை அவளே தன் கண்டுபிடிப்பைப் புறந்தள்ளி விட்டால்? அந்த வெறுமையை, "ரொம்ப
தனிமையை" அவனால் ஜீரணிக்க முடியுமா?
தன்
கண்டுபிடிப்பினை அவளுக்குச் சொல்வதற்காக வரிசைக்கிரமப் படுத்துக்கொண்டான்.
"சுமார்
மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் உலாவித்திரிந்த உலகின்
முதலாவது மனித உயிரினம் ஒரு பெண். அவளிடம் ஆணின் தேவையின்றி தானாகவே கருத்தரித்து வம்சவிருத்தி
செய்வதற்குரிய மரபணு மூலக்கூறுகள் இருந்திருக்கின்றன. தாய் - மகள் - தாய் - மகள் என்ற
ஆண்களே அற்ற சமூக அமைப்புமுறை. அவை காலச்சக்கரத்தில் தேவை அழிந்து போய் பரிணாம வளர்ச்சியில்
சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டு இன்றைய திகதிக்கு சேதப்படுத்தப்பட்ட ஒரு துகளாக
- அதை விட சிறியதாக - ஒரு அணுவை பலகோடிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கு அளவுக்கு பெண்
மரபணுக்களில் மீதமிருக்கின்றன. இதனை மீள துப்பரவாக்கி இயங்கக்கூடிய நிலைக்குக் கொண்டு
வர முடியும். அதற்குத் தேவையான ரசாயனக் கட்டமைப்புகளை உருவாக்கும் அறிவியல் சாத்தியப்படக்கூடியது."
தன்
சட்டைப்பைக்குள் இருந்த மின்விளக்கை ஒளிரச் செய்த போது அவனைச் சுற்றி படர்ந்திருந்த
இருட்டை வெளிச்சம் கிழித்துக் கொண்டு பாதை வகுத்தது. அவனுடைய இளநீல நிற பென்ஸ் கார்
அந்தப் பெருவளவில் ஒரு அனாதை போல தனித்திருந்தது. அதற்குள் தன்னைத் திணித்துக்கொண்டு
ஆர்முடுக்கியைத் திருகினால் எண்ணி பன்னிரண்டு நிமிடங்களில் வீட்டுக்குப் போய் விடலாம்.
இந்த இருட்டும் வெறுமையும் அவளைத்தான் தேடுகின்றன.
தூங்கிக்கொண்டிருக்கும்
அவளை எழுப்பி தன் சந்தோஷத்தைக் கொட்ட வேண்டுமா? காலையில் அவள் எழும்பும் வரை பொறுத்திருந்து
சொல்வதால் என்ன குறைந்து விடப்போகிறது? அவளுக்கு நிம்மதியான தூக்கத்தை விட இந்த கண்டுபிடிப்பு
முக்கியதொன்றாகப் படுமா? இந்த கண்டுபிடிப்பால் அவளுக்கு லாபம் தான் இருக்கிறதா? ஆனால்
இந்த கண்டுபிடிப்பின் முழுமையான சந்தோஷத்தை அமுதாவால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்
என்று மோகன் உறுதியாக நம்பினான்.
வீட்டுக்கு
வந்து கதவை ஓசை வராமல் திறந்த போது விளக்குகள்
எரிந்து கொண்டிருந்தன. படுக்கை அறையிலிருந்து ஓடி வந்து அமுதா அவன் உள்ளங்கைகளில் முகம்
புதைத்துக்கொண்டாள்.
"ஏன்
போன் பண்ணல?"
"நீ
இன்னும் தூங்கலயா?"
"டொக்டர்ட்ட
போனனான். கன்சீவ்வாம்."
மோகன்
எதுவும் சொல்லவில்லை. அமுதாவை அள்ளி இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில்
அவனது கண்டுபிடிப்பின் ஏதோ ஒரு துகள் - அதை விட சிறியது - உடைந்திருக்க வேண்டும்.


Comments
Post a Comment