கிழவனும் கடலும்
காலச்சுவடு பதிப்பகம் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "The Old Man and the Sea" என்ற குறுநாவலை நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் தமிழ்ப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்கள். எர்னெஸ்ட் ஹெமிங்வே அமெரிக்காவின் 20-ஆம் நூற்றாண்டின் பிரசித்த எழுத்தாளர். 1954-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர். அவரின் கடைசிப் படைப்பாக அமைந்த 'கிழவனும் கடலும்', 1951-இல் எழுதி முடிக்கப்பட்டு 1952-இல் வெளியிடப்பட்டது . இந்நாவலுக்கு 1953-இல் அமெரிக்காவின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற சிறந்த நாவலுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
எண்பத்துநான்கு நாட்களாக எந்தவொரு மீனையும் பிடிக்க முடியாமல் போன ஒரு மீனவக்கிழவனின் தன்னம்பிக்கைக்கும் போராட்டத்துக்கும் இடையே கரைகின்ற உணர்வுகளை ஹெமிங்வே பதிவு செய்கிறார். மீனவ சமூகத்தின் நாளாந்த வாழ்க்கைமுறை, வறுமை, ஏளனப்பார்வை, கடல் எனும் மாய தேவதை அல்லது அரக்கன், நிலையாமை, தனிமை, பொறுமை, மனவுறுதி என எழுத்தாளர் ஒன்றன் பின்னர் ஒன்றாக தத்ரூபமாகப் பின்னுகிற வலையில் பல வாசக மீன்கள் இலகுவில் சிறைப்பட்டுவிடும். மீனவக்கிழவனின் வாழ்வைப் போலவே அவனைச் சுற்றிய கதையும் தொய்வாகவே நகருகிறது. சுஜாதா கொடுத்த 'விறுவிறு' பாதிப்பு, காலத்தால் முற்பட்ட நாவல்களை வாசிக்கின்ற போதெல்லாம் இடைஞ்சல் கொடுப்பதை மீண்டுமொருமுறை இந்நாவலில் உணர்கிறேன்.
மீனோடு சேர்த்து மொத்தமாக மூன்று கதாப்பாத்திரங்கள் மட்டுமே கதை நெடுக வலம் வருகின்றன. 'The Life of Pi' திரைப்பட ஞாபகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனதிலே ஊசலாடுகின்றன. "என் வலது கரத்தால் என் இடது கரத்தை அவ்வளவு ஆதரவாக இறுக்கப் பற்றிக்கொண்டேன்; நான் இப்போது தனியாக இல்லை" என்று மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை ஒன்று இக்கதை முழுக்கவும் இழையோடுகிறது. ரேமண்ட் ஷெப்பேர்ட் மற்றும் டன்னிக்ளிப் எனும் இரு கலைஞர்களின் கோட்டுச் சித்திரங்கள் வெகுநேர்த்தியாக கதையைப் படம்பிடிக்கின்றன. மெதுவான கதையோட்டத்துடன் சமரசம் செய்து ஈடு கொடுக்கின்றன.
எம். சிவசுப்பிரமணியன் (எம்.எஸ்.) நெருடல் இல்லாத நடையில் உணர்ச்சி பிசகாமல் மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் எழுத்தோட்டம் மூலப்பதிப்பு பற்றிய சிந்தனைகளை அறவே அகற்றி விடுகிறது. புதிய பதிப்பில் சில மீன்களின் பெயர்களை தமிழ்ப்படுத்தி இருக்கிறார். தனிமையின் தாழ்வாரங்களில் வளரும் இந்நாவலில் கதாபாத்திரங்களிடையே நிகழ்கின்ற மௌன சம்பாஷணைகள் துல்லியமாக உள்வாங்கப்படுகின்றன.
அரைநூற்றாண்டு கழிந்தும், இந்நாவல் சொல்கின்ற களமும் கருவும், இன்றும் எம் வாழ்வியலுடன் ஒன்றித்தே இருக்கின்றது. ஒவ்வொரு விடியலிலும் கடலோடு மல்லுக்கட்ட படகை எடுத்துக்கொண்டு விரைகிறான் மீனவன். அந்தப்படகு எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை அவன் சுயமாகத் தீர்மானிப்பதில்லை. வழியில் ஆபத்துகள் குவிந்து கிடக்கின்றன. பெருங்கடல் ஒரு போராட்டம். அவனின் சீதனம். வயிற்றுப்பிழைப்பு. அவன் தாய். "ஒரு மனிதனை அழிப்பதைக் காட்டிலும் வெல்வது கடினம்" என்று ஹெமிங்வே சொரியும் நம்பிக்கைப்பூக்களின் மணம் நம் அனைவரிலும் பரவட்டும்.
தரமான புத்தகங்களைத் தொடர்ச்சியாகத் தருவிக்கின்ற பூபாலசிங்கம் புத்தகத்தாருக்கு நன்றி.

Comments
Post a Comment