மூன்று மாதமாக எழுதிய மூன்றாவது கதை


இரவு எழுதிய கதையைக் கண்ணைக் கசக்கிக் கொண்டே அப்பாவிடம் நீட்டினான் மோகன். வழமை போலவே இடையில் சில வரிகளைக் காணவில்லை.

"நீ யோசிச்ச சில விஷயங்கள எழுதாம விட்டுர்ற. யார் இப்போ இரவிரவா உன்னை கண் முழிக்க சொன்னாங்க?"

"மூணு மணிக்கெல்லாம் படுத்திட்டேன்பா. நான் மறக்கேல்ல. நல்லா ஞாபகம் இருக்கு. அது தானாவே மறைஞ்சு போகுது."

"காலைல நேரம் ஒதுக்கி எழுத பழகு." முற்றிலும் மகன் பேச்சில் நம்பிக்கை இல்லாதவராய்.

"எனக்கு இரவில தான் எழுத முடியுது."

"ஆனா நீதான் பாதியை எழுதுறதே இல்லையே."

திரும்பவும் முருங்கை மரம் ஏற இஷ்டம் இல்லாமல் மெதுவாக நழுவி தன் அறைக்குள் வந்து கதவை மூடியபடி சிந்தனையில் ஆழ்ந்தான் மோகன்.

அவனுக்கு அமுதாவின் சிரிப்பு பற்றி எழுதியது தெளிவாகவே ஞாபகம் இருந்தது. பசுமையாக திருடி இரண்டு கண்களுக்குள்ளும் ஒளித்து வைத்த சிரிப்பை எப்படி எழுத மறப்பான்? எழுதிய இடத்தில் அழித்த அடையாளம் கூட இல்லை. அந்த வரி நிரம்ப வேண்டிய இடத்திலான இடைவெளி அப்படியே இருக்கிறது. மீண்டுமொருமுறை அந்த சிரிப்பைப் பற்றி எழுதி விட்டால் போதும். மீள்நிரப்பலைத்தான் இத்தனை நாட்களாக செய்து வருகிறான் மோகன்.

இந்த முடிச்சு அவிழாத புதிர் மட்டும் விடாது உறுத்திக்கொண்டே இருந்தது.

"அதெப்படி? அமுதாவைப் பற்றி எழுதும் போது மட்டும் காணாமல் போய் விடுகிறது?"

மோகனுக்கு அது சற்று அவமானமாகவும் இருந்தது. அமுதாவை பற்றி ஆயிரம் கனவுகள் வளர்த்து வங்கி வட்டி போல பத்திரமாகச் சேர்த்து வைத்திருந்தான். "எழுத்துக்களை காப்பாற்றத் தெரியாதவன் நான் கனவுகளையா காப்பாற்றப் போகிறேன்" என நொந்து கொண்டான்.

இன்று விடியும் வரை முழித்தே இருந்து விட வேண்டும் என முடிவு கட்டிக்கொண்டான்.

பகல் வேளையே வயிறு நிரம்ப சாப்பிட்டு நன்றாக உறங்கி எழும்பினான். கடற்கரை போனான்.  நுரை தீர கால் நனைத்தான். இரவு பொழுது போக்க, திரைக்கு வந்து ஒரு வாரமேயான இரு படங்களின் திருட்டு DVDகளை வாங்கிக்கொண்டான். வீடு திரும்பியதும் அமுதாவின் நினைவுகளை மீட்டிக்கொண்டான். உவமைகளை ஒருசேர தொடுத்து கவிதையாய்  ஆறு வரிகள் எழுதி வைத்தான். எழுதிய குறிப்புப் புத்தகத்தை தன் கையோடு அணைத்துக்கொண்டான்.

அமுதா...... மோகன் பத்திரமாய் சேர்த்து வைத்த பள்ளிக்கூட காதல். எதேச்சையான சந்திப்புகளில் ஏதோ சில அவசர வார்த்தைகளைக் கோர்த்துப் பேசிவிட்டு அந்த நாள் கழியும் வரை அவ்வார்த்தைகளின் மகோன்னதத்தில் திளைத்திருக்கின்ற காதல்.

உயர்தரப் படிப்பைப் பாதியிலே நிறுத்தி விட்டு அமுதா கொழும்பு போவாள் என்று மோகன் நினைக்கவே இல்லை. நல்ல பாடசாலையில் இடம் கிடைத்திருப்பதாகச் செய்தி சொன்னார்கள். அவளின் அப்பாவுக்கு வேலைமாற்றம் கிடைத்திருக்கிறதாம் என்று கதை பரவியது. அமுதாக்கு புற்றுநோய் இருப்பதாகவும் சிகிச்சைக்காக கொழும்பு போய் இருக்கிறாள் என்றும் காதோடு காதாக சிலர் பேசிக்கொண்டது வெளியே கசியத்தொடங்கியது.

நான்கு வருடங்கள் கடந்தும் அமுதாவின் பெயரும் எண்ணங்களும் அவன் சார் சூழலில் வழக்கொழிந்து போன பின்னரும் அவன் சிந்தனையில் அவள் இன்னும் இளமையாகவே இருந்தாள்.

மணி இரவு மூன்று. முதல் DVD ஓடி முடிந்திருந்தது. அந்த ஆறு வரிகளைப் புரட்டிப் பார்த்தான். அவளை பற்றி எழுதும் போது மட்டும் அவன் கையெழுத்து எவ்வளவு அழகாகி விடுகிறது. தனக்குள்ளே மௌனமாக சிலாகித்துச் சிரித்தான்.

மெலிதான தாகம். சமையலறையில் மண்பானையில் நிரப்பி வைத்திருந்த தண்ணீரில் கொஞ்சம் குடித்துக்கொண்டான். மீண்டும் அறைக்குள் வந்தான். வைத்துவிட்டுப் போன இடத்திலேயே எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல் அந்த குறிப்புப் புத்தகம் இருந்தது.

பயங்கரமான அமைதி. மெலிதான பயம் மோகனைப் பற்றிக் கொண்டது. அதன் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பினான்.

ஜன்னல் இடுக்குகளினூடாக கசிந்து வந்த காற்றில் அமுதாவின் வாசம் மீதமிருந்தது.


Comments

Popular Posts