சன்னதி
![]() |
| Roger Angell and Andy; New York Central Park, January, 2014; Photograph by Brigitte Lacombe |
'பீச்சுக்கு கூட்டிட்டு போக சொல்லி புலம்பிட்டு இருந்தார் காலைல இருந்து'
வேலை முடிந்து வந்து சப்பாத்து கழற்றிக் கொண்டிருந்த மோகனின் கையிலிருந்த பையை வாங்கியபடி அமுதா காதோரமாகச் சொன்னாள். 'இப்ப நல்லா நித்திரை'.
மோகனின் அப்பா கட்டிலோடு இரண்டறக் கலந்து இன்றோடு இருபத்தைந்து நாட்கள் ஆகின்றன. அவரை சின்ன வயதிலிருந்து வித்தியாசமான பல கோணங்களில் மோகன் ரசித்திருக்கிறான். வீட்டு வாசலில் அக்கம்பக்கம் பார்த்து அம்மாவுக்கு திருட்டு முத்தம் கொடுத்துவிட்டு வேலைக்குப் போகும் கணவனாக, ஏதோவொரு திருவிழாவில் அம்மாவின் கையை விட்டுவிட்டு கடையில் பெரிய பலூன் ஒன்றை வேடிக்கை பார்த்து கொண்டு நின்றவனுக்கு அடுத்த நாள் அதே நிறத்தில் ஒன்றுக்கு நான்கு பலூன் வாங்கிக்கொண்டு வந்த அப்பாவாக, ஏழாம் வகுப்பில் தமிழில் புள்ளிகள் குறைவாக எடுத்தபோது முட்டிபோட சொல்லி திருக்குறளின் முதல் நான்கு அத்தியாயங்களை மனப்பாடம் செய்யச்சொல்லி தண்டித்த ஆசிரியராக, உயர்தர பரீட்சைகளில் வழுக்கி விழுந்து கிடந்தவனைத் தூக்கி 'இனி என்ன செய்யப்போற' என்று ஆதரவு சொன்ன நண்பனாக, தன் முதல் சம்பளத்தில் வாங்கிக்கொடுத்த ஸ்மார்ட்போனில் எப்படி ஈமெயில் அனுப்புவது என்று விசாரித்த மகனாக... மோகனின் எண்ணப்படிமங்களில் ஒரு பட்டியல் விரிந்தது.
மோகன் கழற்றிய சப்பாத்தை உற்றுப் பார்த்தான். அதன் அடியில் ஒட்டியிருந்த மண் கடற்கரை மணல் போலவே அவனுக்குத் தெரிந்தது. அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டுதான் ஆறு வயதில் முதல் தடவை கடற்கரைக்குப் போனான். கடலின் விஸ்தீரணத்தைப் பார்த்த ஆச்சர்யத்தில் அப்பாவின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டது ஞாபகம் வந்தது.
அப்பாவின் அறைக்குள் எட்டிப்பார்த்தான். ஒரு பக்கமாக சாய்ந்து படுத்து இருந்ததில் முதுகுப்புறம்தான் தெரிந்தது. சுருங்கிப்போன உடம்பு. அங்குமிங்குமாகத் தசைகள் தொய்ந்து கிடந்தன.
'ஏதாவது சாப்பிட்டாரா?'
"ம்ஹும்."
"ஏன்?"
"பசிக்கல. பீச்சுக்கு கூட்டிட்டு போ என்டு சொல்லிட்டே இருந்தார். இன்னைக்கு அம்மாவுக்கு திதி. நீங்க மறந்துடீங்க. தான் போய்தான் செய்யோணும் எண்டார். அடுத்த மாசம்தான் மாமா திதி எண்டு சொன்னன். இல்ல இல்ல என்டு....... குரலும் அவ்வளவா சரி இல்ல."
"டொக்டர்ட்ட......."
"ஏதோ ஸ்ட்ரைக்காமே?"
அப்பாவுக்கு அந்த அறைதான் பிரச்சனை என்று மோகனுக்கு தோன்றியது. முன்பெல்லாம் அவரை வீட்டில் ஓரிடத்தில் பார்க்க முடியாது. அடுக்கி வைத்த பழைய பொருட்களைக் நிலத்தில் கொட்டி கிண்டிக்கொண்டோ, வேலை செய்யாத மணிக்கூட்டையோ மின்விசிறியையோ நோண்டிக்கொண்டோ தன் கணக்குக்கோப்புகளில் மூழ்கியோதான் இருப்பார். நண்பர்கள், தொழிற்சங்கங்கள், கோவில் அமைப்புகள் என்று வேலை குவிந்து விட்டால் நள்ளிரவுக்குப் பின்னரும் வீட்டுக்கு வருவதுண்டு. ஓய்வு பெற்ற பிறகு புத்தகம் வாசிக்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது. மாலைநேரங்களில் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பி விடுவார். பெரும்பாலும் கடற்கரையில் நடைபவனி. இதற்காகவே ஒரு வெள்ளை சப்பாத்து வாங்கிக்கொண்டார். அவரின் வயதொத்த ஒரு நண்பர்குழாம் கடற்கரையில் சங்கம் வைத்து ஊர்வம்பு வளர்க்கிறார்கள்.
படுக்கையில் விழுவதற்கு சரியாக மூன்று நாட்களுக்கு முன்னர் கடற்கரையில் இருந்து வரும்போது கையில் ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தார். வெள்ளையும் கறுப்புமாக கலந்த நிறத்தில் கைக்கடக்கமான அளவில் இருந்தது. அவசர அவசரமாக பத்மா என்று அவர் மனைவியின் பெயர் வைத்தார். "ஆம்பிள நாய்க்குட்டி மாமா" என்று சொல்லி மருமகள் சிரித்த போது வெட்கம் பொத்திக்கொண்டு வந்தது.
அந்த மூன்று நாட்களில் அவரின் உறவு, உலகம், ஓட்டம் எல்லாமே பத்மா ஆகிப்போனது. கடற்கரைப் பக்கம் போகவில்லை. எங்கிருந்தோ வெட்டிய மரத்துண்டுகளைக் கொண்டுவந்து பத்மாவுக்கு சிறிய கொட்டில் ஒன்று செய்தார். வீட்டில் கிடந்த பந்து, போத்தல்களை சேகரித்து கொட்டிலில் சேர்த்தார். தன் மீன்பொரியலில் ஒன்றை பத்மாவுக்கு போட்டு விடுவார். பின்னேரங்களில் முற்றத்தில் பின்னல் கதிரையைப் போட்டபடி பத்மாவை தடவி விட்டுக்கொண்டு பத்திரிக்கை வாசிப்பார். அன்றொருநாள் மோகன் வேலை முடிந்து வரும் போது தன் ஸ்மார்ட்போனில் பத்மா தண்ணீர் குடிப்பதை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
அவன் ஞாபகத்தில் அவரின் முதல் நினைவு, மூன்றோ, நான்கோ வயதில் வீட்டுத்தோட்டத்தில் எடுத்த ஒரு புகைப்படத்துக்கு அவன் தலைமுடியை சீவி விட்டதுதான். நன்றாக படிய இழுத்து பின் கோதி விட்டார். அன்றைய நாளில் பின்னால் நின்று சிரிக்கச்சொல்லி கெஞ்சிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தைவிட, கமராவுக்குள் மறைந்திருந்த அப்பாவின் இறுக்கமான முகம் அதே பொலிவுடன் இன்றும் நினைவில் இருக்கிறது. சாயம் போன வெள்ளை சட்டை ஒன்று அணிந்திருந்தார். சட்டைப்பையில் ஒரு கறுப்பு பேனா இருந்திருக்க வேண்டும். மோகன் அந்த புகைப்படத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறான். 'அன்றைய நாளில் அப்பாவையும் ஒரு படம் எடுத்து வைத்திருக்கலாமே?' என்று கவலைப்பட்டிருக்கிறான்.
எண்ணி மூன்றாவது நாள் இந்த நோய் வந்துவிட்டது. சீராக சுவாசிக்க முடியவில்லை. துணையின்றி நடக்க முடியவில்லை. கை
ஒரு முறை தன் ஜன்னலின் வழியே பத்மா எட்டிப்பார்த்து குரைப்பது போல ஒரு உணர்வு. அதன் குரல் அவருக்கு ரீங்காரம் போல கேட்கிறது. கூட்டைத் திறந்து விடச் சொல்லியும் சாப்பாடு வைக்கச் சொல்லியும் அமுதாவிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். கையில் குச்சியைப் பிடித்துக் கொண்டு வாசல்வரை வந்து பத்மா தனியே பந்து விளையாடுவதைப் பார்ப்பார். தன் பக்கமாக பந்து வருகின்றபோது சுற்றும்முற்றும் பார்த்து விட்டு ஒரே பிடியாக பத்மாவை தூக்கிக் கொஞ்சுவார். பின்னர் நாய்க்குட்டி அவர் காலை நக்கத் தொடங்கியதும் அவசரமாக ஒதுங்கி அறைக்குள் வந்து விடுவார்.
நிலைமை நாளுக்குநாள் மோசமானது. வந்த வியாதி புதிய வியாதிகளையும் கூட்டுச் சேர்க்கத் தொடங்கியது. நகரவே இயலாத நிலை. சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்ட ஒரு இரவில் வைத்தியசாலையில் சேர்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் வைத்திருந்தார்கள். உணவு, குளியல், உடுப்பு என்று தொடங்கி எதை வாசிக்க வேண்டும், எதை யோசிக்க வேண்டும் என்பது வரை கட்டுப்பாடு. வெள்ளை சப்பாத்தை மூட்டை கட்டி பல்கனியில் வைத்துவிட்டாள் அமுதா. அவள் கைவசம் பட்டியல் பட்டியலாக மருந்துவகைகள்.
சற்றே தேறி வீட்டுக்கு வந்தபோது பத்மா எங்கோ காணாமல் போய் விட்டது. வைத்தியசாலைக்கும் வீட்டுக்குமாக ஓடித்திரிந்த நாட்களில் அமுதாவுக்கும் பத்மாவைப் பார்த்துக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. வீடு, முற்றம், தெரு என்று எல்லா இடங்களிலும் சல்லடை போட்டுத் தேடியும் பத்மா கிடைக்கவில்லை.
"ஒருவேளை நமக்கொரு பிள்ளை இருந்திருந்தா...."
அமுதா வசனத்தை முடிக்க முதலே மோகன் அப்பாவின் அறையை மீள எட்டிப் பார்த்தான். இப்போது மல்லாந்து படுத்திருந்தார். பாதி வெளிச்சத்தில் கமராவுக்குப் பின்னால் இருந்த அதே முகம்.
"வந்துர்றன்"
மோகன் அவசரமாக செருப்பைக் கொழுவிக்கொண்டு வெளியே கிளம்பினான்.


Comments
Post a Comment