நீல நிறத்தொரு வண்டி


"பாட்டி, nine arch bridge எந்த ஜன்னல் பக்கமா தெரியும்?"

பதுளையில் காலை 5.55க்கு அரக்கப்பறக்க டிக்கெட் வாங்கி 'உடரட மெனிக்கே' புகையிரதத்தை அரைமயக்கத்தில் தொற்றிக்கொண்டு இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஏறியபோது அந்தப்பாட்டி மட்டும்தான் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள். கூடை நிறைய புத்தம்புதிய காய்கறிகள். அவற்றின் மேற்பரப்பில் ஒட்டிய நீர்த்தாரைகள் காயாதிருந்தன.

அந்தப்பெட்டியில் நான் அடைகாத்த தனிமை இரண்டு ஸ்டேஷன்கள் தாக்குப்பிடித்தது. பனிப்போர்வை போர்த்திய இருட்டு, ஒரு அநாதரவான கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தனி மின்குமிழ், விடியலின் முதலாவது கீற்று, குளிர்காற்றழுத்தம், அரைத்தூக்கத்துடனான என் தர்மயுத்தம், அடுத்ததாக இந்த பெட்டிக்குள் நுழையப் போகின்றவரைப் பற்றிய மனக்கணக்கு.

பதுளையிலிருந்து கொழும்புக்கு ஏறத்தாழ பத்து மணிநேர பயணம்.  இலங்கையின் மொத்த மலைநாட்டின் வனப்பையும் சுற்றி வளைத்து பிரித்தானியர்கள் அறுபத்தாறு வருடங்களாகத் தண்டவாளம் போட்டிருக்கிறார்கள். தெமோதர loop, அம்பேவெல, தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கம், ஹோர்ட்டன் சமவெளி என இப்புகையிரதப்பாதை 292.4 கிலோமீட்டர் தூரத்துக்கு நீள்கிறது. 'முன்னர் எல்லா மலைப்பிரதேச தோட்டங்களிலுமாக தேயிலை கொழுந்துகள் சேகரித்து ஏற்றுமதிக்காக கொழும்புக்குக் கொண்டுவந்திருக்கக் கூடும்' என்று பின்னொருநாள் நண்பன் சுதர்மன் சொன்னான்.

காட்சிப்படிமங்கள் அடுக்கடுக்காக விரிகின்றன. ஜன்னல்கம்பிகளுக்கு வெளியே இயற்கை எனும் தேவி சுதந்திரமாக ஆடுகிறாள். கால்களில் க்ளேயர்ஸ் அருவிச்சலங்கை கட்டி ஆடுகிறாள். மலைமுகட்டில் மோதும் மேகங்களைப் பிடித்து நெற்றிப்பட்டம் சூடியிருக்கிறாள். தேயிலைக்கொழுந்துகளால் சரிகை நெய்து அணிந்திருக்கிறாள். மகாவலி சலசலப்பாகச் சிரிக்கிறாள். அவளின் ரகசிய வளைவுகளின் வழி புகையிரதம் பயணிக்கிறது. உயர்ந்த மரங்களின் ஊடாக, நீர்த்தேக்கங்களில் மேலாக, கிராமங்களைக் கடந்து நகரங்களைக் கடந்து பயணிக்கிறது. 'ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்கிறது'. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டியினுள் முகங்கள் மாறுகின்ற போதும் சிரிப்பும் உற்சாகமும்  மாறாதிருக்கின்றன. வாழ்வின் சோகச்சுமைகளை மூட்டைகட்டி வெளியே வீசியதில் சந்தோஷத்துக்கு மட்டுமே வண்டிப்பெட்டிக்குள் இடம் இருக்கிறது.


இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு பொதுவானதொரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. மேலதிகமாக புறநபர்களும் சுடச்சுட வடை, கச்சான் என்று பெட்டியில் நிரப்பிக்கொண்டு இடைப்பட்ட ஸ்டேஷன்களில் ஏறி இறங்கி விற்கிறார்கள். தேநீர் ஐம்பது ரூபாய். வெளிநாட்டவர்களும் பரவலாக வருவதால் நல்ல தேயிலை போடுகிறார்கள் போல, பிரமாதமாக இருந்தது. பத்து ரூபாய்க்குப் பஞ்சம் இங்கேயும் இருக்கிறது. எள்ளுருண்டை கொடுக்கிறார்கள்.

பயண நேரங்களுக்கு என பிரத்தியேக ப்ளேலிஸ்ட் தயார்படுத்தி வைத்திருக்கிறேன். இளையராஜாவும் ரஹ்மானும் மானசீகமாக முட்டிமோதிக்கொள்கின்ற சந்தி. இடையிடையே எட் ஷீரன். மீதி நேரங்களில் சுந்தரராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை' சூடு பிடிக்கின்ற ஆறாவது அத்தியாயத்தில் மூத்தபிள்ளையின் வண்டி முனிசிபாலிட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நாவல் வாசிக்கத் தொடங்கியது தொட்டு றோயல் கல்லூரியின் 'சியம்பல கஹ' நினைவுகள் வந்து போகின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் இப்பிடி ஒரு மரம் இருக்கலாம் என்று சு.ரா. முன்னுரையில் எழுதி இருப்பது எவ்வளவு உண்மை.

பட்டிப்பொல கடந்ததும் இருக்கையை தாரைவார்த்துவிட்டு கதவோரத்தில் முற்றுகை.  குடைந்த மலையின் இருட்டுச் சுரங்கங்களில்  புகைவண்டி நுழைந்து மீள்கையில் முன்னும் பின்னுமாக கூவுகின்ற முகம் தெரியா ஓசைகள் ஒத்த சுருதியில் தெறிக்கிறன. இருள் எம்முள் ஒளிந்திருக்கின்ற குழந்தைத்தனத்துக்குக் கொடுக்கின்ற சுதந்திரத்தை வெளிச்சம் அடையாளம் காட்டிக்கொடுத்து மறைத்து விடுகிறது. இவ்வெளிச்சத்தைத் தேடியும் பாதுகாத்தும் போட்டியிட்டும் பொறாமைப்பட்டும் பயந்தும்தான் எத்தனை வாழ்வுகள்.


'ஏன் இப்படி தனியாவே சுத்துற?' என்று அம்மா உட்பட இதுவரை நிறையப்பேர் கேட்டாயிற்று. தனிப்பயணங்களில் என்னைச் சுற்றி இருக்கின்ற சமூகத்தை உணர்கிறேன். பாடசாலைக்கு பிந்திவிட்ட ஒரு சிறுமி ஸ்வெட்டர் விலத்தி தாயின் கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்கிறாள். பின்னர் தனக்குத்தானே ஏதோ கணக்குப் போட்டுக்கொள்கிறாள். என் பக்கத்து இருக்கையில் ஒரு முதியவர் 'தினமின' வாசிக்கிறார். ஏதோவொரு செய்தியில் அவர் முகத்தின் இறுக்கம் இலேசாக தளர்கிறது. கதவடியில் இரு வெளிநாட்டு காதல் புறாக்கள் முத்த இரை தேடுகின்றன. என் இருக்கையின் கைப்பிடியில் ஒரு காதல் வரலாற்றின் இதயச்சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. நேற்று இந்த இருக்கையிலிருந்து பயணித்த சகமனிதன் எவற்றையெல்லாம் யோசித்திருப்பான், கவனித்திருப்பான் என்று எண்ணிப் பார்க்கிறேன். தனிமையில் என் எண்ணச்சுரப்பிகள் ஆரோக்கியமாக வேலை செய்கின்றன. ஆச்சர்யமும் அவசரமும் கலந்த மனித நாகரிகத்தை, தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்ற வாய்ப்பை மிக விரும்புகிறேன். சமயங்களில் சலனம் பெருந்தண்டனை. ஈற்றில் இந்த வாழ்வும் வெற்றுடம்பும் கூட தனிப்பயணம்தானே?

கண்டி மாநகரை அடைகின்ற வரை இயறகையின் சோபிதத்தில் குலைந்து கிடைக்கின்ற பயணம் பின்னர் கொழும்புக்குத் திரும்புகின்ற போது சந்தோஷ முடிச்சுகளை அவிழ்த்து குளிர் களைந்து நிஜத்தின் அழுத்தத்தைத் தூக்கித் தோள்மேல் சுமத்துகிறது. கொழும்பின் இரைச்சலில் அடுத்த நாளுக்கான ஓயாத தயார்படுத்தலின் மத்தியில் எதேச்சையாக ஒரு மீள்பரிசீலனை. அந்தப்பாட்டி தன் காய்கறி மூட்டையுடன் இடையே ஏதோவொரு ஸ்டேஷனில் இறங்கி இருக்க வேண்டும். நான் சொல்ல வேண்டிய நன்றி இன்னும் என்னிடம் மீதம் இருக்கிறது.


Comments