பசுமை சூழ் பசறை Survey Camp


காலக்கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வெயிலும் மழையும் பனியும் சக்களத்திச்சண்டை போட்டுக்கொள்ளும் நகரம் பசறை. பதுளையிலிருந்து A5 வீதி வழியாக கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூர பயணம். இந்த இயந்திர யுகத்திலும் நமுனுகல மலைப்பள்ளத்தாக்குகளில் அமைதி நிரம்பிக் கிடக்கின்றது.

பேராதெனியவில் தொடங்கி செங்கலடி வரை நீள்கின்ற A5 நெடுஞ்சாலை, பதுளை வரையில் அண்மைக்காலத்தில் புணரமைப்பு செய்யப்பட்டது. இவ்வீதியின் பதுளை தொடக்கம் பசறை வரையான நீட்சி, பசறை வீதி எனப்படும். காவியப்பெண்களின் உடல்வளைவுகளை  வர்ணிக்க கவிஞர்கள் தேடிக்கொண்டிருக்கும் உவமைகள் எல்லாம் இந்த வீதியிலேதான் செறிந்து கிடக்கின்றன. இவ்வீதியினைச் செப்பனிடும் திட்டம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாதாந்த வருடாந்த கூட்டங்களில் பலதடவைகள் ஒலித்து; பின்னர் ஒளித்திருக்கிறது. காத்திரமான சம்பாஷணைகள் எதுவும் இன்றுவரை செயல்வடிவம் பெறாநிலை.

இதன் ஆரம்பக்கட்ட வேலைகளுக்கு தரவு சேமிக்கும் நோக்கில், மொரட்டுவ பல்கலைக்கழக Civil Engineering துறை இளநிலை பட்டதாரி மாணவர்களின் நில அளவையியல்  முகாம் (Survey Camp) நடைபெற்றது. ஆறாவது semester-க்கும் ஏழாவது semester-க்கும் இடையே ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் கடக்கவேண்டிய பாலம். இவ்வருடம் instructor-ஆக ஒரு வாரம் பயணிக்க விளைந்தது.

மொத்த மாணவர்களை குழுவுக்கு 11-12 பேர் வீதம் 11 குழுக்களாகப் பிரித்து A5 நெடுஞ்சாலையின் வெவ்வேறு பாகங்கள் குழுவுக்கொரு instructor பொறுப்பில் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. 146, 147 கிலோமீட்டர் கற்களின் இடையேயான வீதிப்பரப்பு என் பொறுப்பு. நான் கடந்து வந்த மிக நீளமான ஒரு கிலோமீட்டர்.



சுருங்கச் சொல்லின், விரிகின்ற பாதையின் குறுக்குவெட்டினையும் சாய்வையும் துல்லியமாக அளந்து, கணித்து, அதன் போக்குவரத்தினை மேம்படுத்தும் புதிய சாலை வடிவமைப்பை முன்மொழிவதே நோக்கம். தேவையான உபகரணங்கள், தரவுகள் மற்றும் வாகனங்கள் முன்னரேயே பல்கலைக்கழகத்தால் தருவிக்கப்பட்டிருந்தன.  ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிலையத்தில் (Uva Management Development Institute) தங்குமிட, உணவு வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்நகரின் கேந்திர சிறப்பம்சங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் இந்நிலையத்தின் சுவர்கள் எங்கும் ஓவியங்களாகவும் புகைப்படங்களாகவும் நிரப்பிச் சேகரித்திருக்கிறார்கள். இடப்பற்றாக்குறை காரணமாக instructors-க்கு பதுளையிலேயே தனித்த வீடு ஒழுங்கமைக்கப்பட்டது.

பகிர விரும்பிய என் நாளேட்டின் குறிப்புகள் கீழே. அட்சயபாத்திரத்தை ஞாபகப் படிமங்களால் நிரப்புகின்ற முயற்சி இது.

24/01: 

பயணகளைப்பு. அறிமுக விரிவுரைகள். ஓய்வு.

25/01:

பசறை வீதியின் வளைவுகள் பயமுறுத்துகின்றன. பஸ் வண்டியினை ஓட்டுகிற வேகம் பிரமிக்கவும் வைக்கிறது. பழகிவிட்ட பிறகு பயமும் சாதாரணமாகி விடுகிறது. எதிர்பாராத கணத்தில் ஆபத்தின் விஸ்வரூபம் தெரிகிற வரை மனிதன் ஆபத்தினை அலட்சியம் செய்கிறான். வீதி நெடுகிலும் பஸ்வண்டிகள். மொனராகலை, பிபிலை, பசறை, கல்லோயா கடந்து அம்பாறை வரைக்கும் அப்பாதை வழியே பஸ்வண்டிகள் உண்டு.

இனிவரும் நாட்களில் பாதைவழியே ஏதேனும் தற்காலிக கூடாரத்தில்தான் மதிய உணவு உண்ண வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் உணவு தனித்தனியாகப் பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டுவந்து வழங்கப்படும். கிலோமீட்டர் நீட்சியில் சில மளிகைக்கடைகளும் கோணகல  பாலர்பாடசாலையும் இருக்கிறது. ஸ்வெட்டர் போர்த்திக்கொண்டு சுற்றுகிற குழந்தைகளின் மீது பனி அபிஷேகம் செய்கிறது. ஒரு Total Station-ஐ நடுவில் நாட்டி சுற்றிவர குழுமி நிற்கும் மனித முகங்களை குழந்தைகள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றன. "இவங்க என்ன செய்றாங்க?" என ஒரு தாய் விசாரிக்கப்படுகிறாள். வாழ்வியலில் வெவ்வேறு கட்டங்களில் நாம் அடகுவைத்த சிரிப்புக்கு அக்குழந்தைகள் விளக்கம் கேட்கின்றன.


26/01:

இன்று யூரி தேயிலைத் தோட்டத்தின் மத்தியிலே Tacheometry Survey. வெவெஸ்ஸ, யூரி என இரு தேயிலை எஸ்டேட்டுக்கள் இந்தப்பாதை வழியே இருக்கின்றன. கூன் விழுந்த முதுகில் பையைத் தூக்கிக்கொண்டு தோட்டத்துப் பெண்கள் கொழுந்து கொய்கிறார்கள். மழை பெய்கிறது. பலமான காற்று வீசுகிறது. எங்கிருந்தோ பனிமூட்டம் படர்ந்து வருகிறது. தெளிவான விம்பங்களை விழித்திரையில் விழுத்த முடியவில்லை. குரல்களின் அடையாளம் தெரியவில்லை. சூரியக்கதிர்கள் திடீரென சோம்பல் விலத்தி எட்டிப்பாக்கிறது. மீளச் சென்று ஒளிந்து கொள்கிறது. லீச் அட்டைகள் எவ்வித தொந்தரவும் இன்றி இரத்தத்திருட்டு செய்கின்றன. எங்களால் தெளிவான வாசிப்புகளைப் பெற முடியவில்லை. விஞ்ஞான உபகரணங்கள் குழம்பித் தவிக்கின்றன. அந்தப் பெண்கள் மட்டும் கொழுந்து கொய்து கொண்டே இருக்கிறார்கள்.


27/01:

வெறிகொண்டு மழை காலை முழுவதற்கும் கொட்டித் தீர்த்து விட்டது. உபகரணத்தின் லேசர் ஒளி மழைத்துளிகளில் பட்டுத் தெறிப்படையாமல் காத்துக் கொள்வது சிரமம். பிழையான வாசிப்புகளை நிவர்த்தி செய்வது அதைவிட சிரமம். பொறுமையின் எல்லைக்கோடுகளை காலவெளி கரைக்கின்ற போது வெறுப்பு உண்டாகிறது. வெறுப்புக்கு வடிவம் கிடையாது; அதன் போக்குக்குக் குறிகள் கிடையாது. முன்னிற்கும் தோழமையையும் ஊடுருவித் துளைத்து விடுகின்ற அம்பினைப் போன்றது.

ஆனால் இங்கே மனிதர்களிடம் வெறுப்புக்கு நிறையவே பஞ்சம். யார், எவர், எம்மொழி, எவ்வழி, எம்மதம், எக்குலம் என்ற வரலாற்று எச்சங்களைப் புறக்கணித்த சமூகம் அல்லது வரலாறு எச்சங்களால் புறக்கணிக்கப்பட்ட சமூகம். தேசிய ஒற்றுமைக்கான முதல் கன்றை இம்மண்ணில் நாட்டலாம். கேட்டவுடன் உதவுகிறார்கள். பதினைந்து பேர் ஒரே நேரத்தில் இருந்து உணவருந்தக்கூடிய ஒரு சாப்பாட்டுக்கடையில் நாங்கள் பதின்மூன்று பேர் பகல் ஒருமணியளவில் வெளியிடத்தில் தயார் செய்த உணவினை சாப்பிட சிரித்த முகத்துடன் அனுமதி கொடுத்தார்கள். அவர்களை வற்புறுத்தி சில பிஸ்கட்டுக்கள் வாங்கிக்கொண்டோம். பாதை விஸ்தரிப்புக்கு உரித்தான அரசநிலங்களையும் வளைத்து வேலி போட்டுக்கொண்ட குடும்பங்கள் கூட களைப்பு தீர தேநீர் கொடுத்தார்கள். RDA அடையாளங்களை அவர்களின் சொந்த வளவுக்குள் இனங்காட்டினார்கள். எங்களுக்கு முதலே நிறைய surveyors-ஐப் பார்த்த அனுபவக்கதைகளைச் சொன்னார்கள். நாங்கள் கடைசி இல்லை என்பதிலும் அரசாங்கத்தின் இழுத்தடிக்கும் போக்கிலும் பலத்த நம்பிக்கையாய் பேசினார்கள்.


28/01:

இன்றுதான் முதல்தடவையாக பனி விலகி விடியலின் தரிசனம் கிடைத்தது. வெயிலின் இதம் கமராவை வெளியே எடுக்க புதுத்தெம்பு கொடுத்தது. காலையில் கிடைத்த இருமணிநேர இடைவெளியில் பதுளை பஸ் தரிப்பிடம், அதையொட்டிய சந்தை, பொதுவைத்தியசாலை, இலங்கை வங்கி, மகிந்தாஸ் புத்தகக்கடையில் பயண நினைவாக இரண்டு புத்தகங்கள். இங்கே சில அபூர்வமான புத்தகங்கள் கிடைக்கின்றன. கல்கி தமிழ்படுத்திய சத்தியசோதனை, பதினெண்மேல்கணக்கு நூல்களின் விளக்கவுரைகள், பாரதியைப் பற்றிய பாரதிதாசன் கட்டுரைகள், 'பாரதியும் சாதிஒழிப்பும்' என ஒரு பட்டியல் நீள்கிறது.

மாணவர்கள் கலக்குகிறார்கள். வீட்டிலிருந்து மனதளவிலும் வெகுதொலைவில் வந்துவிட்டார்கள். பழைய களைப்பைக் கழற்றி தூரவைத்துவிட்டு புத்துணர்ச்சியுடன் வேலை  செய்கிறார்கள். செய்ய வேண்டிய வேலைகளை முதல் நாளே திட்டவட்டமாக தயார்ப்படுத்துகிறார்கள். என் தேவை இல்லாமலேயே இயங்குகிறார்கள். சமாளிக்கப் பழகிவிட்டார்கள். தாமாகவே பிழைகளைத் திருத்திக் கொள்கிறார்கள். தேவை இருப்பின் லாவகமாகப் பொய் சொல்கிறார்கள். சில பொய்களுக்குத் தலையசைப்பது ஆரோக்கியமானது என கருதுகிறேன். உண்மையினை மறைக்க அதிகாரமும் அறியாமையும் இரு எளிய கருவிகள்.



29/01:

வாரநாட்களுக்கும் விடுமுறைநாட்களுக்கும் இடையிலான அடையாளங்கள் மறந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை பேசலாம் என்று அம்மா சேர்த்து வைத்திருந்த கொத்துக்கதைகள் மீண்டும் பரணில் ஏறிப்படுத்துக்கொண்டன. வேலைகள் மதிய உணவுக்கு முன்னராகவே முடிந்ததால் கமராவும் கையுமாக நான்கு கிலோமீட்டர்கள் நடந்தேன். அடிவார வளைவொன்றில் குடிசை அமைத்து சுடச்சுட சோளன் அவிக்கின்ற கடை, தேயிலைக்கொழுந்தினை மேய்கின்ற காளைமாடு, வீட்டின் கதவின் பின்புறமாக ஒளிந்து நின்று கமராவுக்குச்  சிரிக்கும் குழந்தைகள், விட்டுவிட்டு பூமி நனைக்கும் மேகங்கள், மின்சாரக்கம்பிகளில் வரிசையாய் அமர்ந்து மௌன சாட்சியாய் எங்களையே வேடிக்கை பார்க்கின்ற சந்தோஷப்பறவைகள். இங்கே இயற்கையும் இதயங்களும் இன்னும் பரிசுத்தமாக இருக்கின்றன.  

இன்றோடு, இந்த முகாமுடன் என் இணைப்பு அறுகிறது. இனிமேல், இரு வருடங்களின் முன் எங்களின் Survey Camp-இல் instructor-ஆக இருந்த நதிக அண்ணாவின் வழிகாட்டல். இதுவரை Instructors-க்கு ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டிலே எங்களின் உறக்கச்சத்தம் மட்டும் தான் கேட்டிருக்கும். ஒவ்வொரு இரவும் குளிரைக் கிழித்துக் கொண்டு பத்து கிலோமீட்டர்கள் கடந்து இவ்விடம் வந்து சேர்க்கையில் உறக்கப்போதை உச்சந்தலை வரை ஏறி விடும். இன்று குழுவாக சேர்ந்து, திருடனைக் கண்டுபிடிப்பதை போன்ற விசாரணை வகையான விளையாட்டு ஒன்றில் இரவு மூன்று மணிவரை சிரித்திருந்தோம்.

30/01:

காலையிலேயே கொழும்பு பயணம். பல்கலைக்கழக வாகனவசதி செய்யப்பட்டு இருந்த போதும் 'உடரட மெனிக்கே' கொடுத்த மயக்கத்தில் நின்று விடுபட சிந்தை இல்லை. நீலப்புகையிரத ஜன்னலுக்கு வெளியே மலைமலையாக சந்தோசங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கால ஒத்துழைப்பு இருப்பின் அதைப்பற்றி தனிப்பதிவு எழுத வேண்டும்.


Comments

Post a Comment