குழலி

ஓவியம் : ம.செ ('வெண்ணிலவு சுடுவதென்ன' நாவலுக்காக ) 

"நிஷா. மணி அடிக்காத. பெரிய அய்யர் பார்த்தா அடி போடுவார்."

அமுதா உரத்த குரலில் கெஞ்சிக்கொண்டிருந்தாள். நிஷாக்குட்டி அந்த வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இந்த விளையாட்டு அவளுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

"எனக்கு அவருக்கு பயமில்லே. நீ போ."

அந்த மணியின் வடம் அவளுக்கு லாவகமான உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கால் பெருவிரலை நிலத்தில் கொஞ்சம் பலமாக ஊன்றி எம்பினால் விரல்களுக்குள் அகப்பட்டு விடும். மணியோசையின் கம்பீர பிரவாகம் காற்றுவெளியில் இயற்கையின் சோபிதத்தில் ஒன்றித்து ஒலித்தது.

"நிஷாக்குட்டி என் கண்ணு இல்ல. அம்மாவோட வருவியாம். கோயில சுத்தி கும்பிட்டா, வீட்ட போனதும் ப்ளேன் விளையாடலாம்."

"நீ பொய் சொல்ற. வர மாட்டன். நீ போ."

இனியும் பொதுவெளியில் இவளிடம் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது என்று அமுதா முடிவு கட்டி ஒரே பிடியாக நிஷாவைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டாள். குட்டி திமிறத் தொடங்கியது. நழுவப் பார்த்தது. தன் வலது கைவிரல்களை மடக்கி அமுதாவின் முகத்தில் எக்குத்தப்பாகக் குத்தியது. பதிலுக்கு அமுதா கோபமாக அதட்டி அடி போட்டு விட்டாள். எதிர்பார்த்த சந்தர்ப்பம் அமைந்து விட்டதை அறிந்து கொண்ட குட்டி தன் முழுப்பலத்தையும் ஒன்றுதிரட்டி சத்தமாக அழத்தொடங்கியது.

பிரம்மாஸ்திரம்.

"நடிக்காத. இப்ப நிறுத்துறியா இல்லையா?"

தேம்பித் தேம்பி அழுகை.

அன்றொருநாள்  நிஷாக்குட்டி தன் ப்ளேன் பொம்மையைத் தூக்கி எடை பார்க்கும் போது தவறி காலிலே விழுந்து இரத்தக்காயம் பார்த்துவிட்டது. ஒரு சொட்டு விம்மல் இல்லை. அழுதால் ப்ளேன் பறிபோய்விடும் என்று ஊகித்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் சேர்த்து வைத்தது போல மிருதுவான மிரட்டலுக்கே முருகன் சந்நிதியில் இன்று வீறிட்டு கண்ணீர் விட்டது.

அமுதாவுக்கு கோபம் தாளவில்லை. வெளிவீதியின் கடையடிவாரத்தில் உடம்பெல்லாம் வேலைக்களைப்பு, ஒரு கையில் கச்சான் பக்கற் சகிதமாக பூக்கடைக்காரர்களுடன் கதை பேசிக்கொண்டிருந்த மோகனின் மற்ற கையில் நிஷாக்குட்டியைத் திணித்து விட தீர்மானித்து விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள். நிஷா தாயின் முதுகுப்பக்கமாகத் தலையைப் போட்டுக்கொண்டு அழுதது.

அதன் பார்வை கோவிலின் கிழக்குப்பக்கமாக விசாலமாக வளர்ந்திருந்த மாமரம் வரை நீண்டிருந்தது.

மாமரத்தின் கீழ் ஒரு கிழவர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். நரை முடி, கரிய உருவம், தோற்றத்தில் அமைதி. பழுப்பேறிய வேட்டியின் மடிப்பில் தேநீர் கொட்டிய சாயம். கண்கள் மூடி இசையின் வனப்பில் தன்னைத் தொலைத்த நித்திய ஆலாபனையில் கிழவரின் விரல்கள் குழலின் துவாரம்வழி படிந்து எழுந்தன. அனுபவக்காரர். அவரின் அருகே ஒரு விரிப்பில் சில அதே ரக புல்லாங்குழல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. '100 ரூபாய்' என்று ஒரு வெள்ளைக்காகிதத்தில் எழுதி குழல்களின் இடையே சொருகியிருந்தது.

நிஷாக்குட்டி அவரை அதே இடத்தில் முதலே சந்தித்திருக்கிறது. போன தடவை கோவிலுக்கு வந்த வேளையில் அப்பாவிடம் அடம்பிடித்து ஒரு புல்லாங்குழல் வாங்கி கொண்டது. அந்த குழலை தான் விடாது பயிற்சி செய்து அடுத்த முறை கோவிலுக்கு வரும்போது கிழவரை விட திறமையாக வாசித்துக் காட்டுவேன் என்றும் தான் திரும்பி வரும்வரை இங்கேயே இருக்க வேண்டும் என்றும் சவால் விட்டுவிட்டு போனது. இடைப்பட்ட நாட்களில் ப்ளேன் மோகத்தில் குழலை எங்கேயோ தொலைத்து விட்டது.

இன்று அவரின் இருப்பையும் இசையையும் நிஷாக்குட்டியினால் அங்கீகரிக்க முடியவில்லை.

"வீட்ட போவம்பா."

"அம்மா கும்பிட்டு முடிச்சிட்டு வந்ததும் போவோம். இங்க எத்தனை பூ இருக்கு பாரு! இதென்ன கலர்? அப்பாவுக்கு கரெக்ட்டா சொல்லு பார்ப்போம்!"

"தெரியா. போ."

புல்லாங்குழல் மெதுவாக கல்யாணி ராகத்துக்குள் நுழைந்தது. மரத்தடிக்கிழவர் உன்னதமாக பிரதிமத்திமத்தில் கமகம் செய்து வாசித்துக் கொண்டிருந்தார். கோவிலின் சுற்றுவட்டார வெளிகளிலெல்லாம் ரத்த ஓட்டத்தைப் போல வீரியமாக அந்த இசை வியாபித்திருந்தது. நிஷாக்குட்டி மட்டும் அதன் ஈனஸ்வரத்தின் உருவம் தெரியாத கும்மிருட்டில் தன்னைதானே தண்டித்துக் கொண்டது.

அக்கோவில் தெருக்களை நோக்கித் திறந்தே இருந்த நிஷாக்குட்டியின் மனக்கதவுகளுக்கு இன்று  ஜன்னல் போடுவதாக ஏற்பாடு. செவிப்புலனை தன்னிச்சையாய் கட்டுப்படுத்தும் வித்தையை ஏன் உயிர்களிடத்து வழங்க மறந்து போனாய் என்பதாய் சந்நிதியில் திரைமறைவில் இருந்த முருகனைப் பார்த்து முறைத்தது.

அமுதா வெளியே வந்தாள். அவளின் கோவில் முற்றுகை மிக நேர்த்தியானது. அடுக்கடுக்காக கோர்வையான படிமுறைகளைக் கொண்ட அதன் முழுமைத்தன்மைக்கு மோகன் இன்றுவரை ஒருபொழுதும் ஈடு கொடுத்ததில்லை. அமுதா கிழக்குத் திசையாக மாமரத்தை நோக்கி நடந்தாள். திரும்பி நிஷாவை ஒரு முறை எதேச்சையாகப் பார்த்தாள்.

அவ்வளவு தான். குட்டிக்கு பயம் தொண்டை வரை வந்து விட்டது. தந்தையிடம் இருந்து நழுவி பூக்கடைக்காரர்களின் கொட்டிலுக்குள் ஒளிந்து கொண்டது. தலையை மெதுவாக எட்டி பார்வையைத் துளாவ விட்டது. அதன் உயரத்துக்கு மாமரத்தின் உச்சிகிளை மட்டும்தான் வீச்சம். தன்னைக் கலவரப்படுத்திக் கொண்டதில் அதன் உடலெங்கும் வியர்த்துக் கொட்டியிருந்தது. தலைமுடி கலைந்து போய் விட்டது. கொட்டிலின் இடுக்கில் உடம்பை மறைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டியது. அமுதா அந்தக் கிழவருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

"அப்பா. காருக்கு போவம்பா."

"என்னாச்சு என் செல்லத்துக்கு இண்டைக்கு?"

"போவம்பா......"

மோகன் நிஷாவைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தான். திரை விலகி முருகன் தரிசனம் தந்தான். மேள நாதஸ்வர ஒலியில் கிழவரின் கல்யாணி ராகம் முகவரி இழந்து விட்டது. நிஷாவுக்கு தெம்பு வந்தது.

சற்றே நேரம் கழித்து காருக்குள் வந்த அமுதா ஒரு புல்லாங்குழலை நிஷாக்குட்டியின் கையிலே திணித்து "இந்த முறை உன்னை மன்னிச்சாச்சு. அடுத்த முறை அவருக்கு இதை வாசிச்சு காட்டாட்டி உன்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாராம்" என்றாள்.

ஒரு மாவீரன் கையில் வில்லை ஏந்திக்கொள்வதை போல நிஷாக்குட்டி அந்த குழலை வாங்கியது. அடுத்த முறை அந்த கிழவரை விட திறமையாக வாசித்துக் காட்டுவேன் என்று மீண்டும் சத்திய சபதம் செய்து கொண்டது.

Comments