காட்டு வழி
அமுதாவுக்கு வெள்ளம் போல வேர்த்துக் கொட்டியது. இரு முழங்கால்களின் மீதும் கைகளை முட்டுக்கொடுத்தபடி இழுத்து மூச்சு விட்டாள்.
எழுத்தாளர் விவரித்த அதே காடுதான். இன்னும் சிறிது தூரத்தில், சிறிது நேரத்தில் அந்த அற்புதக்காட்சி தென்பட்டுவிடும். அதனை மட்டும் கண்குளிர பார்த்து வேண்டி விட்டால் போதும். அவளின் பேராசை அடங்கி விடும். அதற்குத்தானே இத்தனை சிரமம்!
அமுதா வழியே ஒரு பாறையில் ஏறி அமர்ந்து கொண்டாள். பசி அவளை நகர விடுவதாய் இல்லை. தோள்பட்டையில் கொழுவியிருந்த பைக்குள் கையினை விட்டுத் துழாவினாள். எஞ்சிய இரண்டு பிஸ்கட் துண்டுகள் கிடந்தன. தண்ணீர் போத்தலும் காலி. அந்த காட்டின் வனப்பு அவளை முழுதாக வசீகரித்திருந்தது. நெடுநாள் கனவு
அந்த காட்சி. ஆகா. இங்கிருந்து வடமேல் திசையில் இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். பின்னர் வரிசையாக பட்டுப்போன காட்டு மரங்கள், தம் கிளைகள் உடைந்து கிடைக்கிற இடத்தில் இடதுபுறமாகத் திரும்பி தேக்கு மரங்களின் ஊடாக நூறு மீற்றர். அங்கே பெரிய மலையருவி ஒன்று இருக்கிறதாம். சூரியன் சரியாக அந்த மலைமுகட்டில் அஸ்தமிக்கின்ற போது........
முதலில் அமுதாவும் இதனை நம்பவில்லை. எழுத்தாளர் கும்பலே வாழ்நாளில் பாதிநேரம் கற்பனைதேசத்தின் கடற்கரைகளில் சிப்பி பொறுக்குபவர்கள் என்றுதான் அவள் எண்ணியிருந்தாள். எனினும் அந்த எழுத்தாளர் தொடர்ந்து சொன்ன விஷயங்களில் அவள் பூரணமாக ஒன்றிப்போய் விட்டாள். அவர் தீர்மானமாகப் பிரயோகித்த ஒவ்வொரு வார்த்தையும் அவளின் ஆர்வக்கோளாறு ஹோர்மோன்களைத் தட்டி எழுப்பி இங்கே இழுத்து வந்து விட்டது.
சம்பவம் இதுதான். நவம்பர் மாத பௌர்ணமியைத் தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமைகளில் குறித்த வேளையில் குறித்த மலைமுகடு இரண்டாகப் பிரிந்து புதிய ஆற்றுப் பிரவாகத்துக்கு வழிவிடுமாம். அவ்வேளையில் மலைஉச்சியில் ஒரு குறுமுனி தோன்றி தன் கமண்டலத்தில் இருந்து சில துளி நீரினைக் கைகளிலே அள்ளி அப்பிரவாகத்தில் தெளிப்பாராம். அவ்விடமே சிவஜோதியாக ஒரு கணம் பொன்னிறத்தில் மினுங்குமாம். அவ்வேளை இஷ்ட தெய்வத்தை மனதிலே இருத்தி வேண்டிக்கொண்டால் தீராத குறையெல்லாம் தீரும் என்று அந்த எழுத்தாளர் சொன்னார். சாட்சியும் காட்டினார். எல்லா வைத்தியமுறைகளாலும் கைவிடப்பட்ட செல்லம்மாக்கிழவி தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அடிக்கடி அவளின் மருமகள் மேலே பொரிந்து தள்ளினாள்.
தனியே ஒரு பெண் காட்டுக்கு வரலாமா? எவ்வளவு அச்சம்? இன்னும் 20 வயது கூட நிரம்பவில்லை. வீட்டில் கேட்பார் இல்லையா?
அமுதா கொண்டையை அவிழ்த்து முதுகில் தளரவிட்டாள். அவள் மனதில் செல்லம்மாக்கிழவியின் சிரிப்பு முழுதாகப் பதிந்திருந்தது. முடக்குவாதத்தால் எழும்ப ஒண்ணாமல் படுத்த படுக்கையாய் இருந்த தன் தாயை செல்லம்மாக்கிழவியின் உருவில் அவள் பார்த்தாள். ஆயிரம் நண்பர்கள் அவளிடம் சொல்லியாயிற்று. பைத்தியக்காரி என்றே முடிவு கட்டி விட்டார்கள். மோகன் கொஞ்சம் மேலே சென்று தானும் வருகிறேன் என்று வேறு சொல்லிப் பார்த்தான். தனியாகத்தான் போக வேண்டுமாமே? எழுத்தாளர் அழுத்தமாகச் சொன்னாராம்.
இலைகள் ஊசலாடி உதிர்ந்து கொண்டிருந்தன. அவற்றினூடாக சாயங்கால சூரிய ஒளி கீற்றுக்கீற்றாக நிலத்தில் படர்ந்தது. வேர்கள் தலைகீழாக வான்பார்த்து விழுந்த மரங்கள். கனத்த உருளைகள் போல மரங்கள். வழிகளை வகுத்தும் மறித்தும் வளர்ந்து நின்ற மரங்கள். காடு சுதந்திரம். காடு நம்பிக்கை. காடு போராட்டம். காடு... காடு... எங்கும் நிசப்தம். தூரத்தில் அருவியின் ஓசை மட்டும் சுத்த நாதம் போல ஒலித்துக்கொண்டிருந்தது.
இன்னும் கொஞ்ச தூரம்தான். போய் விடலாம். நம்பிக்கை ஊன்றி நடந்தாள். கைக்கடிகாரத்தில் அடிக்கடி கண்புதைத்தாள். அவளின் ஒவ்வொரு நரம்பும் களைத்திருத்தது. இரத்தம் ஓடமாட்டேன் என்று அடம்பிடிக்கத் தொடங்கியது. கால்களை லீச் அட்டைகள் பதம் பார்த்ததில் விரலிடுக்குகளில் சிவந்திருந்தது. அவள் நடந்தாள். வேகமாக நடந்தாள். தன் தாய் நடக்க ஆசைப்பட்ட தூரத்தை எல்லாம் சேர்ந்து நடந்தாள்.
எழுத்தாளர் குறித்துச் சொன்ன இடம். மலையருவி விண்ணுயர வளர்ந்து, தூய பால் போன்ற வெள்ளை நுரை கக்கிக் கொண்டிருந்தது. அவ்வோட்டம் உலகின் எந்த சட்டத்துக்குள்ளும் அடங்காத சுயம்கொண்டு விரும்பிய பாறைகளில் மோதி தாவி வளைந்து நெளிந்து படர்ந்து.... பிரம்மாண்டம். சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கி இருந்தான். அந்நுரைகளிலே பொன்பதித்துப் பளபளத்தான்.
இது அவளின் பத்திரப்படுத்தப்பட்ட கனா. சரித்திரங்கள் சரித்திரங்களாகத் தீராத விடாய். இன்று அவளுக்கு சுதந்திரதினம்.
அவளின் இச்சை. அவளின் தேவை. அவளின் அனிச்சயம். யாதும் அவள் வடிவம். எங்கு காணினும் சக்தி!
நேரம் நெருங்கியது. அமுதா வாய் பிளந்து நின்றாள். எதை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று அவள் மனது தனக்குள்ளேயே ஆயிரம் தடவை வெள்ளோட்டம் பார்த்து விட்டது.
அந்தக்காட்சி. மலைமுகடு மெதுவாக அசையத் தொடங்கியது. அமுதா தானும் சேர்ந்து அசைவதாக, நடுங்குவதாக உணர்ந்தாள். திடீரென்று ஒரு உரத்த அதிர்வு.
"என்னடி பொட்டபுள்ளச்சிக்கு பட்டப்பகல்ல கனவு வேண்டி கிடக்கு. யாரு ஒங்கம்மாவா வந்து சமைப்பா? பொத்தகத்த தூக்கி வைச்சிட்டு வெட்டியா கிடக்காம போய் சாப்பாடு எடுத்து வை. கால ஒடைச்சு ஒங்கம்மாக்கு பக்கத்துல படுக்க போட்டிருவன்." சாராய வாடை கலந்த அப்பாவின் குரல். எட்டி உதைத்ததில் கைகளில் இருந்த புத்தகம் தூரமாகப் போய் விழுந்தது.
அந்த அடர்ந்த வனாந்தரத்தில் மலையடிவார மரப்பொந்து ஒன்றினுள் மறைந்திருந்த பாம்பு கடித்ததில் அமுதா சுயநினைவின்றி விழுந்து கிடந்தாள். அவள் வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது.
மலையுச்சியில் குறுமுனி கமண்டலம் சகிதமாகத் தோன்றினாரா?


Comments
Post a Comment