குருப்பெயர்ச்சி
கவியும் நிஷாவும் வேறுவேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
கவி தீவிர யோசனையில் இருந்தாள். கற்பனைக்குதிரைகளின் லாயம் அவள் மனம். தன்மீது சுண்டப்படுகின்ற சவுக்கை அலட்சியப்படுத்தியபடி அக்குதிரைகள் கொடூர மலைச்சரிவுகளின் வழியே ஓடிக்கொண்டிருந்தன.
நிஷா தன் வலது முழங்கையின் இடுக்கில் இடதுகையினால் ஓய்வின்றி தேய்த்தபடி விம்மிக்கொண்டிருந்தாள். ஒரு பயங்கர மழைக்குப் பின்னரான அசட்டுத் தூறல் போல அவளின் விம்மல் பிசகிய சுருதியில் ஒரு கோர சம்பாஷணையின் தடயமாக ஒலித்தது.
"வந்ததும் வராததுமாய் என்ன சண்டை? கவி, போய் uniform மாத்தி குளிச்சிட்டு வா சாப்பிட!" என்றபடி நிஷா பக்கம் திரும்பிய அமுதா "நீ ஏன்டி அழுற?" என்று நிறுத்த, நிஷா ஓரக்கண்ணால் கவியைப் பார்க்க, பெரியவள் கதிரையிலிருந்து ஒரே எட்டாகக் கீழே குதித்து பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கியபடி சிட்டாக அறைக்குள் பறந்துவிட்டாள். "ஒண்ணுமில்லைமா" என்று நிஷா மழுப்பியது உடுப்பு மாற்றிக்கொண்டிருந்த கவியின் காதுவழியே கவித்தேனாக இறங்கி ஆறுதல் கொடுத்தது.
கவி குளித்துவிட்டு வருவதற்குள் முன்கதைச் சுருக்கம் :
பெரியவளுக்கு வருகிற மாதம் எட்டு வயசாகிறது. நிஷாவுக்கு "ஸ்கூல் அட்மிஷன் இன்டெர்வியுக்கு முகம் கொடுப்பது எப்படி? - மழலை எடிஷன்" புத்தகம் எழுதுகிற வயது. இரண்டு மாதத்துக்கு முன்னர் இவர்கள் இருவர் தலையிலும் இக்குடும்பத்தின் பாரிய பொறுப்பு ஒன்று சுமத்தப்பட்டிருந்தது. இல்லை! இவர்களே பலவந்தமாக சூடிக்கொண்ட மாலை அது. மோகனின் தம்பி (மோகன் அமுதாவின் கணவன் என அறிக) மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல மூன்றே நாட்கள் மீதமிருந்த நிலையில் கவியின் பிடியில் மாட்டிக்கொண்டான்.
"ரூஊஊபன் சித்தா, இவ்ளோஓஓஓஓ புக்ஸும் உங்களோடதா?" - அவ்வளவு அழகாக அவன் பெயரை இதுவரை வேறெந்தப் பெண்ணுமே உச்சரிக்கவில்லை என்பதால் கவிக்கு விஷேட அனுமதி இருந்தது.
தன் பயணச்சீட்டுகளை முப்பதாவது முறையாகச் சரிபார்த்துக் கொண்டிருந்தவனிடம் இருந்து "ம்" என்ற பதில் மட்டும் வந்தது.
"நீங்க லண்டன் போனா இதெல்லாம் யாரு பார்த்துப்பாங்க?" முகத்தில் சந்தேக ரேகைகளைப் பரப்பி நாடியில் சுட்டுவிரலை வைத்தபடி நின்றாள்.
ஆச்சர்யமாக அவளைத் திரும்பிப் பார்த்தவனிடம், எவ்வித ஆரவாரமும் இல்லாமல் "போனா போச்சு; நான் பார்த்துக்கிறேன்!" என்றாள்.
இலேசாக சிரித்தபடி தன் வேலையில் மீள மூழ்கியவனைப் பார்த்து, தன் இரண்டு கைகளையும் இடுப்பில் இறுக்க முட்டுக்கொடுத்தபடி "நிஜம்ம்ம்மா ஒழுங்கா பார்த்துப்பேன். ஒரு நாளுக்கு ஐம்பது ரூபா காசு. இல்லைன்னா அம்மா இல்லாத டைம் புக்ஸ்ஸ வீஈஈசி எறிஞ்சிடுவேன்" என்றாள். இப்போது அவள்கை காற்றில் எதையோ வீசி எறிவது போல பாவனை செய்துகொண்டிருந்தது.
"ஆனால் சின்னவங்களை வேலைக்கு வைச்சா என்னை புடிச்சு ஜெயில்ல வைச்சிடுவாங்களே!"
"நீங்க ஜெயிலுக்கு போனா புக்ஸ்ஸ யாரு பார்த்துப்பாங்க?" அதே சந்தேக ரேகைகள்; நாடியில் அதே விரல்.
"அடிப்பாவி! சரி நீயே பார்த்துக்கோ. ஐம்பது ரூபா கூடிப்போச்சு. நாப்பது."
"நாப்பத்தைஞ்ஞ்ஞ்சு."
"நீ ஸ்கூல் போற நேரத்தில தொலைஞ்சுட்டா?"
"நிஷா பார்த்துப்பா!"
"அவளும் கூட்டா? யாரு போட்ட திட்டம் இது?"
"ரெண்டு பேரும் தான். நாங்க கம்பெனி வைச்சிருக்கோம். KN கம்பெனி."
"எப்போ ஆரம்பிசீங்க?"
"நேத்து இரவு."
"சூப்பர்; நாப்பத்தைஞ்ச எப்பிடி பிரிச்சுப்பீங்க?"
"அது எல்லாம் உங்களுக்கு தேவல்ல. கம்பெனி ரகசியம்."
அடுத்த மூன்று நாட்களுக்குள் அந்த தட்டு நிறைய அங்குமிங்குமாய் குவிந்து கிடந்த புத்தகங்களை ஒரு சேர குவித்து அளவு நிறுத்து பொறுமையாக அடுக்கி கவியின் பழைய கணக்குக் கொப்பியின் எழுதாத பக்கங்களில் அவற்றுக்குத் தனியாகப் பதிவேடு தொடங்கி சித்தா விமானம் ஏற முதல் எக்குத்தப்பாகக் கணக்குப் போட்டு 'வாராந்தம் முன்னூற்றைஞ்சு ரூபா அம்மாவிடம் எண்ணி வைத்து விட வேண்டும்' என்று சொல்லி உடன்படிக்கைக்கு கையெழுத்தும் வாங்கிவிட்டார்கள் இருவருமாக. பதிவேட்டில் முதல் பக்கத்தில் இரு புத்தகங்களுக்கு கையும் காலும் வைத்து அவை இரண்டும் ஒன்றின் கையை மற்றது பற்றி உயர்த்திப் பிடித்து வெற்றிக்கோஷம் ஒலிப்பதைப் போல நிஷா வரைந்திருந்தாள். அதன்கீழ் "KN" என்று கம்பெனிக்கு பெயர் எழுதி சிவப்பிலும் கறுப்பிலுமாக வர்ணம் தீட்டியது 'கவி'நயம்.
பாடசாலை முடிந்து வந்ததும் முதல் வேலையாக சித்தாவின் புத்தகவடுக்கை ஆய்வு செய்து பதிவேட்டில் பதிந்தபிறகுதான் கவிக்கு இதர வேலை என்பது கம்பெனி தீர்மானம். அவ்வடுக்கு அவளிலும் பெரியது. அதன் நடுத்தட்டை ஏறிப்பார்க்க ஒரு கதிரையும் மேல்தட்டுக்கு சித்தாவின் மேசையும் இருந்தது. அவளுக்குத் தெரியாமல் யாரும் புத்தகம் எடுக்கக்கூடாது என்று சித்தாவின் நெருங்கிய நண்பர்களுக்கும் கம்பெனியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு உத்தரவு அறிக்கையிலும் கைகோர்த்த புத்தக சித்திரமும் கீழே கம்பெனி பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் தெரியாமல் புத்தகம் எடுப்பவர்கள் பதிவேட்டில் குறிப்பு எழுத வேண்டும். ஓரிரு வாரத்திலேயே அவ்வீட்டின் நாளாந்த வழக்கமாகவே அப்புத்தக அடுக்கின் பொறுப்பு நடவடிக்கைகள் மாறிவிட்டன. கிடைக்கிற வருவாயில் மாதத்துக்கு இருமுறை இருவருமாக அமுதாவுடன் சந்திக்கடைக்குச் சென்று பலூன், தோடு, சட்டை என்று பேரம்பேசி சண்டை போட்டு வாங்கிக்கொண்டார்கள்.
இன்றைக்கு கவியின் ஆய்வில் காத்திருந்த பேரதிர்ச்சிதான் மேலே விம்மலுக்குக் காரணம். "குருப்பெயர்ச்சி பலன்கள்" என்று தலைப்பிட்ட அடுக்கின் மேல்தட்டிலிருந்த புத்தகத்தைக் காணவில்லை. பதிவேட்டிலும் யாரும் குறிப்பு எழுதவில்லை. புத்தகவடுக்கின் எல்லா அந்தரங்க இடைவெளிகளிலும் தேடிப்பார்த்து விட்டாள். நிஷாவைப் பிடித்து உலுக்க அவள் காலையில் மோகனுடன் போன பள்ளி அனுமதிக்கான தன் அறுபதாவது நேர்காணலின் கதைச்சுருக்கத்தைத் தொடங்க ஒரு சுருக்கத்துக்குள் இன்னும் ஒன்றா என்ற கோவத்திலேயே ஜீவகாருண்யம் பாராமல் நிஷாவின் கையில் பலமாகக் கிள்ளிவிட்டாள்.
கவியின் மொழியில் - நீஈஈஈண்ட - இச்சுருக்கம் முடிகின்ற பொழுது கவி குளித்து வந்து சாப்பிட்டு குறுகிய மௌன இடைவெளி கடந்து நிஷாவுக்கு சமாதான அழைப்பு விடுத்து பின்னர் நிஷாவுடன் சேர்ந்து கம்பெனியின் அடுத்தகட்ட திட்டங்களை அட்டவணைப்படுத்திவிட்டு இருவரும் நித்திரையும் கொண்டுவிட்டனர்.
மாலை வேளை. இருவருமாக கையைப் பிடித்துக் கொண்டு அமுதாவிடம் வந்தார்கள்.
"நாங்க ரூபன் சித்தாவோடு பேசணும்!"
"பேர் சொல்லி கூப்பிடாதே என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?"
"நாங்க பேசணும்ம்ம்ம்ம்ம்ம்!"
"இப்ப சித்தா நித்திரை கொள்ளுற நேரம். காலைல பேசலாம்."
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் முகத்திலும் பலத்த ஏமாற்றம். இந்த நிலைமையை கம்பெனி மதியநேரம் போட்ட அவசரகாலத்திட்டத்தில் உள்வாங்கியிருக்கவில்லை என்பது சற்று தெளிவாகவே தெரிந்தது.
"அம்மா! இனிமேல் எங்களுக்கு காசு வேணாம்."
அமுதா சற்றே முகம் மலர்ந்தவளாய், "என்னாச்சு?"
"ரூபன் சித்தாட்டதான் சொல்லுவம்."
"வியாழன் மாற்றம் மகரத்துக்கு தொழில்நட்டம் என்று போட்டிருந்தது. காலைலயே பார்த்தேன். சரிதான் போல"
அமுதா கபடமாகச் சிரித்தாள். அதன் அர்த்தம் புரியாமல் கம்பெனி காலையில் சித்தாவிடம் சொல்ல வேண்டிய விடயங்களை ரகசியமாகப் பேசி முடிவெடுத்துக் கொண்டிருந்தது.


Comments
Post a Comment