ஒரு முழம் தாலிக்கயிறு
![]() |
| Amar Ramesh Photography (studioa.amarramesh.com) |
பல வர்ணப் பூக்களைத் தொடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் ஐயரின் மந்திர உச்சாடணங்களுக்கும் மேள நாதஸ்வர கச்சேரிக்கும் இடையில் மெதுவான குரலில் மோகன் அமுதாவின் காதில் முணுமுணுத்தான்.
"பாவம் அக்கா. வீட்லயே இருந்திருக்கலாம்."
"நம்ம கல்யாணத்தில என்னை விட அவதான் அக்கறையா இருந்தா."
"இருந்தாலும்...."
"அவ இருக்கிறதில உனக்கு ஏதும் பிரச்சனையா?"
"சுத்தமா இல்ல. என்ன உளறுற நீ?"
"இரக்கப்பட்டு - ஆம்பிள புத்திய காட்டாத"
"ஆஹா. பொம்பிள புத்தி போட்ட திட்டம் என்னாச்சு?"
"பார்ப்போம்"
ரேவதி துரித கதியில் இயங்கிக்கொண்டிருந்தாள். இன்று அவள் தங்கையின் திருமண நாள். வாசலில் வந்தாரை வரவேற்று, கற்கண்டு, பன்னீர் தெளிக்க, தன் மகள் ஷோபா உட்பட நான்கு சிறுமியருக்கு பொறுப்பு வகுத்துக் கொடுப்பது தொடங்கி சமையல் எத்தனை மணிக்கு தயாராகும் என்பது வரை அவள் சிந்தனை முழுக்க பரபரப்பு மட்டும்தான் நிரம்பியிருந்தது. உறவினர்களின் ஏக்கப்பார்வைகளையும் போலி நலன்விசாரிப்புகளையும் அவள் முன்னமே எதிர்பார்த்திருந்தாள். அவற்றை எல்லாம் எப்படி சுதாகரித்துக் கொள்ள வேண்டும் என்று இரவே தன்னைத் தயார்படுத்தி வைத்திருந்தாள்.
அமுதா ரேவதியிலும் ஆறு வயது இளையவள். அண்ணன் தம்பி யாரும் இல்லை. அமுதா பிறந்து சில காலங்களிலேயே அவர்களின் தந்தை இறந்துவிட்டார். அன்றிலிருந்து அமுதா நடை பழக வேண்டுமென வீட்டுமுற்றத்தைக் கூட்டி வைப்பதில் தொடங்கி ரேவதி காத்து வளர்த்து வந்த வேள்வி இன்று மணமேடையில் அக்கினிசாட்சியாக எரிந்து கொண்டிருந்தது. கூறைச்சேலையில் அமுதா பரிபூரணமாக ஜொலிப்பதை ஆனந்தமாக ஒரு கணம் மெய்மறந்து பார்த்துவிட்டு சமையலறைப்பக்கமாக அவசரமாகத் தாவியவளை தூரத்து சொந்தக்கார மாமி பிடித்துக்கொண்டார்.
"உனக்கேன்மா இந்த வேலை. பார்த்துக்க தான் ஆள் இருக்கே. நீ போய் கல்யாணத்தைப் பாரு."
"பார்க்கிறேன் மாமி."
"அமுதா அழகா இருக்கா. உனக்குத்தான் கடவுள் இப்பிடி ஒரு கஷ்டத்தை குடுத்திட்டார்."
"ம்"
"குடிகாரனுக்கு பொண்ண கொடுக்காதீங்க எண்டு மண்டைல அடிச்சு சொன்னேன். உங்கம்மா கேட்டா தானே? நல்ல வரன் திரும்ப வராது எண்டா. பைக்ல கொஞ்சம் மெதுவா ஓடி இருக்க கூடாதா? இந்தக்கால பசங்க கன்னாபின்னா எண்டு ஓடுறாங்க. என் பையனும் தான். கேட்டா தானே?"
"அவர் ஓடி வரேல்ல. பின்னால தான் இருந்தார்."
"முன்னால வந்த லொரிக்காரன்லதான் பிழையாமே?"
"அப்பிடித்தான் சொன்னாங்க"
"கடவுள் கொஞ்சம் கருணை வைச்சிருக்கலாம். இந்த சின்ன வயசுல போய்"
"விடுங்க மாமி"
"நகை, புதுசேலை எண்டு கல்யாணத்தில நீ முன்னால நிண்டிருக்க வேண்டியவ."
"ம்"
"என்ன செய்ய போற? ஷோபா?"
"யோசிக்கல மாமி. சமையல் என்ன நிலமை எண்டு பார்த்திட்டு வாறன். நீங்க சாப்பிட்டுத்தான் போகோணும்."
"கட்டாயமா!"
லாவகமாக நழுவி அரங்கிலிருந்து ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு அறைக்குள் வந்து கதவை தாளிட்டு மூடிவிட்டு ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள் ரேவதி. அடக்கி வைத்திருந்த ஆத்திரமும் கவலையும் கண்ணீராய் கொட்டத் தொடங்கியது. விம்மி விம்மி அழுதாள். இருட்டிய கார்காலத் தெருவிலே தனியே நடப்பது போல ஓருணர்வு.
இன்றைக்கு ஒரு வாரத்துக்கு முதலே மோகன் ரேவதியிடம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி இருந்தான். ரேவதி திருமணத்தை முன்னின்று நடாத்துவதை அவன் வீட்டார் அபசகுனமாகக் கருதுவதாகவும், தான் வெகுவாகப் போராடியும் எதுவித பலனும் இல்லை என்றும், அமுதாவுக்கு தெரியவந்தால் தாங்கிக்கொள்ள மாட்டாள் என்றும் கோழை வசனம் சொல்லி இருந்தான். மோகனின் அக்காள் அவனுடன் நேரடியாக இது தொடர்பாகப் பேசிக்கொண்டதும் எதேச்சையாக ரேவதியின் காதில் விழுந்தே இருந்தது. ரேவதியும் எதுவித ஆட்சேபனையும் சொல்லாமல் நாசூக்காக விலகி திரையின் மறைவிலே செய்யவேண்டி இருந்த வேலைகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தாள். ஊராரின் பொய்மை சாஸ்திர நீதி அவளின் பகிரங்க பழக்கங்களில் எவ்வித மாறுதலையும் காட்டியிராத போதும் ரகசியமாக அவள் அழுத இரவுகளில் அதிகமாகவே நனைந்திருந்தது. அந்த ஈரத்தின் குளிர்மையில் அமுதாவின் எதிர்கால சந்தோஷங்கள் நீச்சலடித்துக் கொண்டிருப்பதாக ரேவதி தன்னைத்தானே தேற்றி வைத்திருந்தாள்.
ரேவதிக்கு அவளின் திருமணத்தில் பிடிப்பு இருக்கவே இல்லை. தனக்கும் டேவிட்டுக்குமான காதலை வீட்டில் சொன்னதுமே 'வேற்று மதத்தவர் ஆகாது' என்று கூட்டுக்குடும்பத்தின் புதிய கலாசாரத்தலைகள் முடிவு செய்து அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடி நடாத்திய திருமணம்.
"அப்பா மட்டும் இருந்திருந்தால்" என்று ஏங்கிய நாட்களைக் கடந்து திருமண வாழ்வில் ஏதோ மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். குடிப்பழக்கத்தைத் தவிர்த்துப் பார்த்தால் அவள் கணவன் நல்லவன் தான். யாருக்கும் இல்லை என்று சொல்ல மாட்டான். ரேவதியை அன்பாகப் பார்த்துக்கொண்டான். ரேவதியின் அம்மா இறந்த போது பெற்ற மகன் போல எல்லா கடமைகளையும் செய்து முடித்தான். அமுதாவையும் ரேவதியுடனே வந்திருக்கச் சொன்னான். ஷோபா பிறந்ததன் பிறகு குடிக்க மாட்டேன் என்று கூட சத்தியம் செய்திருந்தான்.
அன்று ஏன் குடித்தான் என்று ரேவதி இன்றுவரை தேடிப்பார்க்கவே இல்லை. ஒரு அடர்ந்த இரவில் அடையாளம் பார்க்க வரச்சொல்லி அயலார் வந்து அழைத்துப் போனார்கள். அவளின் சந்தோஷ அடையாளங்களை எல்லாம் அன்றோடு தொலைத்துவிட்டு திரும்பி வந்தவள்தான். ஒன்றரை வருடங்கள் கடந்தாயிற்று.
நாதஸ்வரம் உச்சஸ்தாயியில் ஒலித்தது. சுபமுகூர்த்தம் போலும். அமுதாவின் கையைப் பிடித்துக்கொண்டு முதல்நாள் பாடசாலைக்குக் கூட்டிப்போய் அதிபர் அறையிலிருந்து சிற்றுண்டிசாலை வரை காட்டிவிட்டு கடைசியாக தன் வகுப்பறையைக் காட்டி "ஏதும் வேணும் எண்டா இங்க வரோணும். அக்கா இருப்பன். சரியா?" என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இன்று அந்தக் கையை அவளுக்குப் பிடித்தவனிடமே பிடித்துக் கொடுத்து விட்ட திருப்தியில் சிலாகித்துக்கொண்டாள்.
வேகமாக எழும்பி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள். சமையலறையில் உணவு பரிமாறத் தயாராக இருந்தது. முதல் பந்திக்கு ஓரளவு கூட்டமும் கூடி விட்டது. மேடையில் அமுதா பிளாஸ்டிக் சிரிப்புகளுக்கிடையே பார்வை வீசி யாரையோ தேடிக்கொண்டிருப்பது போல இருந்தது.
"இந்த ஷோபா எங்கே போனாள்?"
தன் சிறுவர் கூட்டணியிலிருந்து பிரிந்து போய் மண்டப வாயிலின் உட்கதவோரமாக தன்னிலும் வளர்ந்த ஒருவருடன் கதை பேசிக்கொண்டிருந்த ஷோபா ரேவதியைப் பார்த்தவுடன் ஓடி வந்து காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். "அந்த மாமா தன்னோட வருவியா எண்டு கேக்கிறார்மா. முடியாது எண்டுட்டேன்" என்று சொல்லி அப்பழுக்கில்லாமல் சிரித்தாள்.
ரேவதி தலையை நிமிர்த்திப் பார்த்தாள். பலகாலமாகப் பார்த்துப் பழகி தன் எண்ணங்களின் ஏதோவொரு அடிவாரத்தில் பத்திரப்படுத்தி வைத்த முகம். அன்றிலும் சற்று விசாலமாக இருந்தது. பார்வையில் அதே நேர்மை. புதிதாக கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது. அவன் ரேவதியை நோக்கி நடந்து வந்தான்.
"நீ.... நீங்க இங்க?"
"அமுதா மோகனோட வந்து சந்திச்சா."
ரேவதியின் கண்கள் ஆச்சர்யமாக விரிந்தன.
"உன்கூட பேசணும்."
சற்றே தூரமாக, இளைத்த சிரிப்பொலிக்கும் நாதஸ்வர இசைக்கும் இடையிலே மோகன் அமுதாவின் காதில் மீண்டும் ஏதோ முணுமுணுத்தான்.


ஆஹா. பொம்பிள புத்தி போட்ட திட்டம் :D
ReplyDeleteவழமை போலவே success. :-)
Delete