நாலாவது மாடியில் நாலாவது அறை
![]() |
| Photographer: Anonymous |
அமுதா வேகமாக நாற்சந்தியைக் கடந்து கிழக்குத்திசையில் திரும்பி நடந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆளரவம் ஏதுமில்லை.
அந்த பரந்த வீதியில் இதற்கு முன்னரும் அவள் ஒரு தடவை பயணித்திருக்கிறாள். அன்று அவளுடைய மனதிலே தன் எதிர்காலத்தைப் பற்றிய எக்கச்சக்கக் குதூகலம் இருந்தது. தான் பிறந்து வளர்ந்த கிராமத்தைப் பிரிந்து இந்த பெரிய கொழும்பு நகருக்கு வந்திருக்கின்ற எதுவித பதட்டமும் இல்லாமல் கையோடு கைகோத்திருந்த கணவனின் தோளில் சாய்ந்தபடியே நடந்து வந்தாள். அந்த தெருவெங்கும் பூக்களைக் கொட்டிக்கொண்டிருந்த சாலையோர மரங்கள் இரு நாட்களின் முன் நடைபெற்ற அவர்களின் திருமணத்திக்கான ஆசீர்வாத ஏற்பாடு என்று அவளுக்குத் தோன்றியது.
அவர்களிடையே அன்று நிலைத்திருந்த மௌனத்தினை அமுதா வெகுவாகவே ரசித்திருக்க வேண்டும். "இங்கேதான் நான் வேலை பார்க்கிற office இருக்கிறது" என்று அவள் கணவன் மோகன் ஒரு கட்டிடத்தைக் காட்டிச் சொன்னது, அவள் காதிலே முழுதாக விழாத வண்ணம் அந்த பிரயாண சௌந்தர்யத்தில் அவள் திளைத்திருந்தாள்.
நான்கு வாரங்கள் கழிந்து இன்று மீண்டும் அதே தெரு. அதே விஸ்தீரணம். அதே அமைதி. அவளுடைய எண்ணங்கள் மட்டும் முழுதாகவே மாறிப்போய் இருந்தன. அவள் நடையில் இனம்தெரியாத பயம் இருந்தது. உடல் நடுங்கி ஒடுங்கி வேர்த்திருந்தது.
இன்று அரைமணி நேரத்துக்கு முன்னதாக அவளுக்கு வந்த தொலைபேசி அழைப்பு அவளின் கடந்த நான்குவார குருட்டுத்தவ வாழ்க்கையைச் சுக்குநூறாக உடைந்துவிட்டது. மோகன் இன்று அலுவலக மாடிப்படிகளில் தடக்கி விழுந்துவிட்டதாகவும் பலத்த காயம் என்றும் இருந்தாலும் பயப்பட தேவை இல்லை என்றும் வைத்தியசாலையில் சேர்த்திருப்பதாகவும் நான்கு மணிக்கு முதலே அலுவலகத்துக்கு வந்தால் அவளையும் வைத்தியசாலை அழைத்துப்போவதாகவும் ஒரே மூச்சில் விடாது சொல்லி முடித்தது அந்த அழைப்பு.
அவளுக்கு பழக்கப்பட்ட குரல்தான். அந்த குரலுக்கு சொந்தக்காரர் மோகனுடன் இரண்டு தடவை வீட்டுக்கும் வந்து போய் இருக்கிறார். கிடைத்த தகவலை சந்தேகிக்க அவள் உள்ளத்தில் தைரியம் இல்லை. அலுவலக முகவரி கணவனின் அறையில் பரவிக்கிடந்த கடிதவுறைகளில் ஒன்றில் கிடைத்தது. கண்ணில் பட்ட புடைவைக் கட்டிக்கொண்டு அலங்காரம் ஏதும் செய்து கொள்ள நேரமில்லாமல் நடக்கத்தொடங்கியவள்..... பதினைந்து நிமிஷமாவது நடந்திருப்பாள்.
இந்த காலப்பகுதியில் கொழும்பைப்பற்றி தெரிந்து கொள்ளவோ, இந்நகரின் வாழ்வியலைப் புரிந்துகொள்ளவோ அமுதா எந்த பிரயத்தனமுமே எடுத்திருக்கவில்லை. அவளின் எண்ணங்கள் முழுவதும் தன் கிராமத்து மலை அடிவாரங்களிலேயே இன்னமும் தங்கியிருந்தது. கணவன் வேலைக்குப் போய் திரும்பும் வரையில் தொலைபேசியில் தன் வீட்டாரின் நலம் விசாரிப்பதிலேயும், தான் தாயாரிடம் கற்றுக்கொண்ட தையலிலேயுமே காலம் தள்ளி வந்தாள். ஒரு காலத்தில் வீட்டாரிடம் பொய் சொல்லிவிட்டு தன் தோழிகளுடன் அக்கிராமத்தின் நீல அகலங்களை அளந்த அவளின் சந்தோச வாழ்வு இன்று அந்த தொடர்மாடி வீட்டினுள்ளேயே அடங்கிப் போய் இருந்தது. அதை அவளேதான் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அயல்வீட்டாருடன் கூட அளவாகத்தான் பேசிவந்தாள். கணவன் எத்தனை தடவை சினிமாவுக்கும் கடற்கரைக்கும் கூட்டிப்போவதாக சொல்லியும் அமுதா கேட்டபாடில்லை. ஒரேயொரு தடவை மோகன் விடாப்பிடியாக நின்று கேட்டுக்கொண்டதால் கதிரேசன் கோவிலுக்கு மட்டும் இருவருமாகப் போய் வந்தார்கள்.
அவளுக்கு அந்த தெரு வரைக்கும் தான் தெரிந்திருந்தது. சற்று தொலைவிலே நெருங்கிக் கிடந்த கட்டடங்களின் வேறுபாட்டை உணர்ந்துகொள்ள முடியாதிருந்தாள். அவள் மனநிலையின் ஆய்ந்து அறியும் பாங்கு வற்றிப்போய்க் கிடந்தது. எதிரே மோட்டார் சைக்கிளில் வருகின்ற இளைஞனிடம் உதவி கேட்கலாமா என்று யோசித்தாள். உள்ளத்தில் திடீர்திடீரென்று தோன்றி மறைகின்ற பயம் அவளின் நடவடிக்கைகளைப் பூரணமாக வசீகரித்திருந்தது. ஓர் படர்ந்த காட்டின் நடுவே தான் அநாதராவாகக் கைவிடப்பட்டதாக அமுதா உணர்ந்தாள். அழ வேண்டும் போல இருந்தது. முன்வீட்டில் யாரையாவது கேட்டு கூட்டி வந்திருக்கலாமோ என்று தோன்றியது. லேசாக தலை சுற்றத்தொடங்கியது.
தெருவிலே விழுந்து கிடந்த பூக்கள், இந்த முறை, அவளின் வாழ்வின் ஆதாரமும் விழுந்து போய் இருப்பதாக குறிப்புணர்த்தவே தன் களைத்த நடையில் சற்று வேகம் கூட்டிக்கொண்டாள். "நகரத்தில் சனம் திரிகிற இடம் ஆயிரம் இருக்க இங்கே வந்துதானா இவர்கள் பிழைப்பு நடத்தவேணும்? அன்று அவர் office என்று காட்டிய போதே கவனித்துத் தொலைத்திருக்கலாம். இந்த ஒரு மாசம் நாலு இடம் போய்ப் பார்க்க எத்தனை தடவை கூப்பிட்டிருப்பார். எனக்கு நல்லாவே இது தேவை." என்றெல்லாம் உளறிக்கொண்டாள்.
எதிர்புறமாக சிறிய பெட்டிக்கடை ஒன்றிருந்தது. ஒரு நடுத்தர வயதானவர் கடைக்குள் சாவகாசமாக உட்கார்ந்திருந்து பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். அவளிடம் வெறுமனே பத்து நிமிடங்களே மீதம் இருந்தன. தன் கிராம பெட்டிக்கடைகளில் பெரிய வாக்குவாதம் எல்லாம் செய்தவள்தான். இந்த நகரத்தின் கந்தகப்புகை வாசனை அவளின் தைரியத்தை எல்லாமே சுருட்டி வைத்துவிட்டது. இனிமேலும் இப்பிடியே இருந்தால் நிலைமை கைமீறி விடும் என புரிந்தவளாய் கடையை அணுகி இடம் விசாரித்தாள். கிடைத்த பதிலில் அவள் முகம் பிரகாசிக்கின்ற அளவுக்கு தகவல் இருந்தது. சடுதியாக தெருவினைக் கடந்து முன்னால் இருந்த கட்டடத்தினில் வரவேற்பு மேசையில் கடித்த உறையினை நீட்டினாள். மேசையின் பின்புறமாக இருந்த பெண் அவளைத் தீர்க்கமாய் பார்த்துவிட்டு நான்காவது மாடிக்குப் போக சொன்னாள்.
அமுதாவின் உடலெங்கும் கணக்கிடமுடியாத அளவு பயம் பரவத்தொடங்கியது. மோகன் இதற்கு முன் இரு தடவை அலுவலகப்பக்கம் வரச்சொல்லி கூப்பிட்டிருக்கிறான். அவள் வீம்பாகத் தட்டிக்கழித்தது ஞாபகம் வந்தது. தான் வந்திருக்கும் இடம்தான் கடித உறையில் இருந்த இடம் என்ற வரையில் அவளுக்கு உறுதி இருந்தது. ஆனால் இந்த இடத்திலே ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் அவளுக்குத் தெரியவில்லை. பிழையான இடம் வந்து சேர்ந்தோமோ என்ற பயம் வேறு லேசாக அவளின் வேர்வையில் நனைந்திருந்தது.
நான்காவது மாடி பெரிதும் பரபரப்பாய் இருந்தது. அமுதா படிக்கட்டுகளில் ஏறி உள்ளே நுழைந்ததும் ஒரு பெண் அவளை யார் என்று விசாரித்துவிட்டு விருந்தினருக்கென்று போடப்பட்டிருந்த கதிரைவரிசைகளில் அவளை உட்காரச் சொன்னாள். பின்னர் உள்ளே சென்று விசாரித்துவிட்டு வந்து ஒரு நீளமான வழியினைக் காட்டி அதில் நான்காவது அறைக்குப் போகச்சொன்னாள்.
"நாலாவது மாடியில் நாலாவது அறை" என்று மோகன் முன்னொரு தடவை அவளை அலுவலகத்துக்கு அழைக்கும் போது சொன்னது அவள் ஞாபகத்துக்கு வந்தது. மனதில் லேசாக பிறந்த தைரியத்துடன் அந்த பணிப்பெண் காட்டிய திசையில் வேகமாக நடந்தாள். அந்த அறைக்கதவை மெதுவாகத் தள்ளினாள். திறந்து கொண்டது. உள்ளே ஒரு மேசை இருந்தது. அதன் பின்னால் இருந்த பெரிய நாட்காலி வெறுமையாக இருந்தது. மோகனின் பெயரைக் குறிப்பிடுகின்ற அடையாளப்பலகை மேசையின் மீது இருந்தது.
அமுதா மெதுவாக உள்ளே நகர்ந்தாள். கதவு தானாகவே மூடிக்கொண்டது. திடீரென பின்னால் இருந்து அவளை பலமான இரு கரங்கள் இறுக்கிக் கட்டி அணைத்துக் கொண்டன. அவளின் தேகம், உள்ளம் எங்கும் சிறிது சிறிதாக தேங்கி இருந்த பயத்தினுடைய ஒட்டுமொத்த வெளிப்பாடு "ஆ" என்ற பேரிரைச்சலாக வெளிப்பட்டது. அவள் முழுதாக சிதறிப்போனாள். அறைக்கதவின் வெளி ஓரமாக சில விம்பங்கள் திடீரென மொய்த்துக் கொண்டன. அமுதா கண்ணகி கோவமாகத் திரும்பிப் பார்த்தாள். மோகன் சிரித்தபடி நின்றான்.
"இன்று இடதுகைக்காரர்களின் தினமாம். என் ஆசைக்குமாரிக்கு ஒரு சின்ன surprise" என்று தன் கையில் அழகான வெளியுறையினால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு உருளை வடிவ பொதியை அவள் கையில் மோகன் திணித்தான்.
அமுதா ஒன்றும் பேசவில்லை.
"இன்னும் பத்து நிமிஷத்துல free ஆகிடுவேன். சினிமா?"
"இல்லை."
இம்முறை அமுதா சொன்ன 'இல்லை'யில் சுத்தமாக பயம் இல்லை. மோகன் மீதான தீர்க்கமான கோவமும் அவளின் இடதுகையில் உருண்டு கொண்டிருந்த பொதியில் என்ன இருக்கின்றது என்று பார்க்கத் துடிக்கின்ற ஆவலும் லேசான காதலும் செழித்திருந்தது.


Comments
Post a Comment