ஒரு ராஜாவும் இரு கதைகளும்
![]() |
| Photograph : Rushen Basnayake |
அந்த இரவு சலனமின்றி இருந்தது. அவளைப்போலவே.
அவள் கணவன் ராஜா இறந்து போய் இரண்டு வருடங்கள் கழிந்தும் அந்த வடுக்கள் அவளிடத்தில் அப்பிடியே நிலைத்து விட்டன. வாடிய முகம், சலித்துப்போன நடை, ஆர்ப்பாட்டம் இல்லாத புடவை, துரோகங்களாலும் ஏமாற்றங்களாலும் ஒடுங்கி, ஓய்ந்து போன வேகம்....
தன் இடதுபுறத்தில் பரந்திருந்த வயல்வெளியின் நடுவே கட்டப்பட்டிருந்த வீட்டின் முன்கதவைத் தட்டினாள்.
----------------------------------------------------------------------------------
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ராஜா வீட்டு முன்கதவில் யாரோ தட்டுகின்ற சத்தம் கேட்டு எழும்பினான்.
"எவன்டா அது? நேரம் காலம் தெரியாம?"
சோம்பலாக எழும்பி வேட்டியை சரி செய்தபடி ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொண்டான்.
முன்கதவு வரை இருபது அடிகளாவது நடக்க வேண்டும். சூரியன் மறையும் வரை வயல்வெளியிலும் பின்னர் மாலினியின் கொட்டகையிலும் தன் நிதானத்தைத் தொலைத்திருந்த ராஜா தளர்ந்து, தடுமாறி, தவண்டபடி......
------------------------------------------------------------------------------------
திறந்திருந்த சாளரங்களின் மறைவில் அவள் ஒளிந்து கொண்டாள்.
'எங்கே தன் கணவன் தனக்கு துரோகம் செய்து நடுத்தெருவில் விட்டுவிடுவானோ என்று பயந்து எங்கிருந்தோ வந்த தைரியத்தில் சமையல் கத்தியால் அவனை நெஞ்சிலே குத்திக் கொலை செய்த பாவம் - பழைய கடன் கணக்குகளையும் பொய் உயில்பத்திரங்களையும் காட்டி தன் வீட்டையும் வயல்நிலத்தையும் பறித்து வைத்திருக்கிறானே இந்த படுபாவி.
ஒரு கொலை செய்தவளுக்கு இன்னொரு கொலை புதிதல்ல. கதவைத் திறந்து வெளியே வர ஓங்கிப்பாய்ந்து நெஞ்சில் குத்தி விடவேண்டும்.'
------------------------------------------------------------------------------------
ராஜா கதவைத் திறந்தான். அந்த அடர்ந்த இருட்டில் யாரையுமே அவனுக்குத் தெரியவில்லை.
வெளியே வந்து எல்லாத் திசைகளிலும் தீர்க்கமாக ஆராய்ந்து விட்டு மீண்டும் கதவை மூடிவிட்டு வேகமாக நடந்தான்.
குறுக்கே மனைவியின் அறை. அவன் வீடு திரும்பும் முன்னரே தூங்கிப்போயிருந்தாள். காற்றில் லாவகமாகக் கலைந்திருந்த அவள் சேலை ராஜாவின் மனதில் லேசான சலனம் கொடுத்தது.
"பாவம். எனக்காக காத்திருந்திருப்பாள். எவ்வளவு அழகு. இனிமேல் அந்த கடன்காரி மாலினியின் கொட்டகைப்பக்கம் ஒதுங்கவே கூடாது. நான்கு மாத கர்ப்பம் வேறு. இனிமேல் இவளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்."
அவளின் அப்பழுக்கற்ற அழகில் ஈர்க்கப்பட்டு மெதுவாக அவளருகில் சென்றான்.
-------------------------------------------------------------------------------------------
"இவனைக் கொலை செய்து என்ன ஆகிவிடப் போகிறது? பாவி. நாளை நானும் இல்லை என்றால் என் ஒன்றரை வயது குழந்தை எங்கே போவாள்? இனிமேல் இதுபோல கத்தியைத் தூக்கிக்கொண்டு திரிவதை நிறுத்த வேண்டும். நான் செய்த பாவங்களுக்கு எனக்கு இந்த வாழ்க்கை தேவைதான். இனிமேலும் இப்படி யோசிக்க கூடாது."
-------------------------------------------------------------------------------------------
ராஜா அருகில் சென்று மனைவியை மெதுவாகத் தொட்டான். கோவமாக, ஆவேசமாக திரும்பிய அவன் மனைவி "கொட்டகைப் பழக்கம் நடுராத்திரியில் வீட்டு முன்கதவு தட்டுகிற வரைக்கும் வந்து விட்டதா?" என்று கர்ஜித்துக்கொண்டே கையில் இறுகப் பிடித்திருந்த சமையல் கத்தியால் ஓங்கி அவன் நெஞ்சிலே குத்தினாள்.
--------------------------------------------------------------------------------------------
[பிற்குறிப்பு - வீட்டின் உள்ளே / வெளியே நிகழுகின்ற காட்சிகளுக்கிடையே இரண்டு வருட காலவித்தியாசம் உண்டென அறிக.]


Comments
Post a Comment