சொர்க்கவாசல்

Photograph: Abslon (abslon.deviantart.com)


அந்தக் கதவு மெதுவாகத் திறந்தது.

பசியாற்றாமையிலும், கொடுத்த அடிக்கு என்னால் இப்போதைக்கு எழுந்திருக்க முடியாது என்ற நம்பிக்கையிலும்  கதவினைப் பூட்டுப் போடாமல் தேநீர் குடிக்கப் போயிருக்க வேண்டும் இந்தக் கயவர்கள்.

பாதி திறந்திருந்த கதவினூடாகப் பார்வையை வெளியே நீட்டினேன்.

அந்த இருட்டறைக்கு அப்பால் ஒரு அழகான உலகம். அதன் வெளிச்சம் என்னைத் தோள்பற்றி இழுத்தது.

ஒடுங்கிக்கிடந்த திராணி எல்லாம் ஒன்றுதிரட்டி நடக்க முயன்றேன். வலித்தது.

கம்பீரமாய் ஓடுகின்ற களைதீரா நதி, கரையோரமாய் விழுதுகளைத் தூதனுப்பும் ஆலமரங்கள், அதன் இலைகளினோடு குழைந்து பேசுகின்ற தென்றல், அவை நீவிவிட்ட என் உடல் வடுக்கள்....... மனிதகுலத்தின் concrete கரங்களுக்குள் சிக்குறாத செம்மண்.

அதன் வனப்பில் கொஞ்சமாக வேகம் கூட்டிக்கொண்டேன்.

"மோகன்?"

ஆச்சர்யக்குரல்! பெண்குரல்!

"மோகன். உங்களைத்தான் தேடி வந்தேன்."

திரும்பிப் பார்த்தேன். அழகாக இருந்தாள். படபடப்போடு பேசினாள்.

"என் பெயர் மேனகா.ஒரு தவறு நடந்து விட்டது. என் boss உங்களை அவசரமாக சந்திக்க வேண்டுமாம்."

"என்னை உங்களுக்கு எப்படி தெரியும்?"

"நன்றாகவே தெரியும். முதலில் என்னோடு வாருங்கள். boss-உடன் பேசுங்கள். ஆறுதலாக நாம் பேசலாம். coffee."

நம்பிக்கை இல்லாத ஆசைவார்த்தைகள். அவள் கண்களையும் coffee-ஐயும் மறுக்க முடியவில்லை.

நடந்தோம்.

.............................................................................................

உள்ளே இருவர் இருந்தார்கள்.

விரிந்த மார்பு, செருக்கு நிரம்பிய பார்வை, பலசாலி போல ஒருவர். கூடவே ஒடுங்கிப்போய் மெலிந்து தேய்ந்த ஒரு கையாள். மேனகா அறையின் வெளியே காத்திருந்தாள்.

"மன்னிக்க வேண்டும் மோகன். தவறு நடந்து விட்டது."

"நீங்கள் யார்?"

"EMA வங்கியின் தலைமை கணக்காளர் நான். பெயர் தர்மராஜ்."

"ம்ம்ம்"

"எங்கள் வங்கியில் பணம் திருட்டு போய்விட்டது. நீங்கள்தான் திருடன் என்று எண்ணி......."

"பணம் திருட்டா? நானா?"

இருட்டறையில் அடி விழுந்த இடங்கள் மீள வலித்தன.

"ATM அறையில் கிடைத்த CCTV footage-இல் உங்களைப் போலவே ஒருவர் இருந்தார். கைவசம் நிறைய credit cards. முகம் தெளிவில்லை; நீங்களென நினைத்து விட்டோம். அடித்தால் உண்மையை சொல்லி விடுவீர்கள் என நினைத்தோம்."

"அநியாயம். நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது."

"தொடர்திருட்டுகளில் முதலில் உங்களுடைய credit card-ஐதான் பாவித்திருந்தார்கள்."

"என்னுடைய card தொலைந்துவிட்டது என மூன்று நாள் முதலே complaint கொடுத்திருந்தேன்."

"அது இப்போதுதான் கிடைத்தது. மன்னிக்க வேண்டும்."

"போங்கடா...... நீங்களும் உங்கட footage-உம். எனக்கு நியாயம் வேண்டும். நான் சட்டத்திடம் போகப் போகிறேன்."

"எங்களுடைய முதலாளி மிகவும் வருந்தினார். உங்களுடன் பேச வேண்டும் என நினைக்கிறார்.  வேண்டாம். இங்கேயே முடித்துக் கொள்ளலாம். முதலாளி இங்கே மேல்தளத்திலேதான் இருக்கிறார். படிக்கட்டுகள் வெளியே இருக்கின்றன."

"ம்ம்.... பார்க்கிறேன்."

............................................................................................................

படிக்கட்டுகளைத் தாண்டி மேலே ஏறி வந்து அமர்ந்து கொண்டேன். கீழே மேனகா கண்ணில் படும்படியாகக் காத்திருந்தாள். இளஞ்சூடான coffee போல எதேச்சையாகச் சிரித்தாள்.

அந்த இளைத்த corridor-இன் நீளப்பக்க மூலையில் ஒரு அறைக்கதவு இருந்தது. வெளியே இருந்த ஒன்றில் அமர்ந்து கொண்டேன். மனவோட்டங்களை மெல்ல அசைபோட்டுக்கொண்டேன். அமைதியாக கவனமாக பேச வேண்டும்.

"திருடிய பணம்தான். ஆனாலும் பணக்காரர்களின் கறுப்புக்கணக்குகளில் தூங்கிக்கிடப்பதிலும் பார்க்க ஏழைச்சிறுவனின் கல்விக்கு உதவுகின்றபோது அதன் வலிமை அதிகம். நான் பிடிபட்டாலும் அவனின் கல்வி தடைபடக்கூடாது. லாவகமாகப் பேசவேண்டும்."

அரைமணி நேரமாகியும் அந்த கதவு மூடியே இருந்தது.

ஓரமாய் சாம்பிராணி புகை காட்டிக்கொண்டு வந்த இளைஞனை நிறுத்திக் கேட்டேன்.

"நீங்கள் தேடி வந்த முதலாளி இந்த corridor-தான். நீங்கள் மனதில் நினைப்பதை எல்லாம் இந்த corridor கேட்டுக்கொண்டிருக்கிறது. உங்கள் நியாயத்தராசின் வீரியத்துக்கேற்ப இந்தக்கதவு திறந்து கொள்ளும்."

"இது எந்தக்கதவு?"

"சொர்க்கவாசல்"

திடீரென்று சாம்பிராணி புகை பரவ அந்த இளைஞன் விலகிவிட்டான். மேனகாவும் கண்ணில் அகப்படவில்லை.  வெளிச்சங்கள் அணைந்தன. கும்மிருட்டு.

தூரமாக சில boots சத்தங்கள் கேட்டன.

[இனி இந்தக் கதையை முதல்வரிக்குத் திரும்பச் சென்று வாசிக்கவும்]

பிற்குறிப்பு:
சுஜாதாவின் "மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல" சிறுகதையினுடைய தாக்கத்தினில் எழுதியது.

Comments